சென்னை:
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்து வந்த போயஸ்கார்டனில் உள்ள வேதா நிலையம் வீடு நினைவிடமாக மாற்றப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
இதற்கு போயஸ்கார்டன் பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா இல்லத்தை ஜெயலலிதா நினைவில்லமாக மாற்றப்படும் என அறிவித்த தமிழக அரசு அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றன.
ஆனால், அதற்கு ஜெ.,வின் அண்ணன் மகள் தீபா தரப்பிலிருந்து எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுக்கப்பட்டது. ஆனால் அதை கண்டுகொள்ளாத எடப்பாடி அரசு, போயஸ் கார்டன் இல்லம் தொடர்பாக நிலம் கையகப்படுத்த அனுமதி கேட்டு ஆட்சியர் அலுவலகத்தில் அரசு தரப்பில் மனு செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து போயஸ் கார்டனில் வாழும்மக்களிடம் கருத்து கேட்க ஓர் அலுவலரை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலம் நியமித்தது. வேதா இல்லத்தை சுற்றியுள்ள இடத்தை ஆக்கிரமித்து நினைவில்லமாக்கினால் அது அங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்குமா என கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.
இதற்கு அங்குள்ள பெரும்பாலான பங்களாவாசிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நினை வில்லமாக மாற்றினார் கட்சியினர், பொதுமக்கள் என ஏராளமானோர் போயஸ் தோட்டம் பகுதியில் குவிவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று கூறி வருகின்றனர்.
அதே சமயத்தில் கட்சி சார்புள்ளவர்கள், சாதாரண மக்கள் போன்றோர் ஜெ. நினைவில்லம் ஆக்கப்படுவதை வரவேற்று வருகின்றனர். இது தொடர்பாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கார்ப்பரேஷன் ஹாலில் ஏற்கனவே பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று 2வது முறையாக பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்று வரும் கருத்துகேட்பு கூட்டத்தில் போயஸ்கார்டன் பகுதி மக்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.