நானும் சமூகவிரோதிதான் என்று நடிகர் ரஜினிகாந்துக்கு மக்கள் நீதி மய்ய தலைவரும் நடிகருமான கமலஹாசன் பதிலடி அளித்துள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார்.
பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தூத்துக்குடியில் சமூகவிரோதிகள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். எதற்கெடுத்தாலும் போராட்டம் என்றால் தமிழகம் சுடுகாடாகும்.” என்றார்.
அவரது பேச்சுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் மக்கள் நீதி மய்ய தலைவரும் நடிகருமான கமல்ஹாசன்.
அவரிடம் ரஜினியின் கருத்து குறித்து கேட்கப்பட்டது.
அதற்கு கமல்ஹாசன், “ரஜினியின் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. நான் காந்தியின் சீடன். துப்பாக்கிளை திறந்த மனதுடன் எதிர்கொண்டவர் காந்தி. அதே போல செயல்பட்டிருக்கிறார்கள் தூத்துக்குடி மக்கள்.
உரிமை சார்ந்த போராட்டங்களை மக்கள் நிறுத்த மாட்டார்கள். போராட்டம் நடத்துபவர்கள் சமூகவரோதி என்றால் நானும் சமூகவிரோதிதான்” என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.