காலா ரஜினி – திரவியம்

 

காலா திரைப்படத்தில் மும்பையில் வாழ்ந்த திரவியம் நாடார் என்பவரை இழிவுபடுத்தும் வகையில் கதை சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி, அவரது குடும்பத்தினர் 101 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நடிகர் ரஜினிகாந்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம் வரும் 7ஆம் தேதி வெளியாக இருக்கிறது.  இந்நிலையில் மும்பையைச் சேர்ந்த ஜவஹர் நாடார் மற்றும் அவரது குடும்பத்தினர் சார்பில் அவர்களது வழக்கறிஞர் செய்யது இஜாஷ் அப்பாஸ் நக்வி, நடிகர் ரஜினிகாந்துக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பி இருக்கிறார்.

ஜவஹர்

அதில், காலா திரைப்படத்தில் ஜவஹர் நாடாரின் தந்தையான திரவியம் நாடார் தவறான கோணத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜவஹர் நாடாரின் குடும்பத்தினர் கடும் மனஉளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாகவும், இதற்கு இழப்பீடாக 101 கோடி ரூபாய்  அளிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

முன்னதாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என ரஜினிகாந்த் கருத்து தெரிவித்திருந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் படத்தை வெளியிடுவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

அதே போல தூத்துக்குடி கலவரத்துக்கு சமூகவிரோதிகளே காரணம் என்று ரஜினி பேசியதால் சுவிஸ், நார்வே நாடுகளில் காலா படத்தை திரையிட மாட்டோம் என அங்குள்ள விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் காலா படத்திற்கு தினம் தினம் புதிய நெருக்கடிகள் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.