கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கரின் மின்னஞ்சல் கணக்கை தவறாக பயன்படுத்துவதாக  காங்கிரஸ் சார்பில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கணையத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக மனோகர் பாரிக்கர் மார்ச் மாதம் முதல் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார். பிப்ரவரி 28ம் தேதி முதல் மனோகர் பாரிக்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு நோய் தொற்று ஏற்படாமல் இருக்க கோப்புகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டுமென மருத்துவர் அறிவுறுத்தியதாகவும் காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் கஷியாப் தெரிவித்தார். இத்தகைய சூழலில் அவருக்கு வரும் இமெயில்களை அவரால் பார்க்க முடியாது என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சித்தநாத் புயோ புகாரில்  கூறியுள்ளார்.

மேலும் பாரிக்கர் தனது முதன்மை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி மூலம் கோப்புகளை அழிப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இத்தகைய மோசடி நிதி ஆதாயங்களை எதிர்பார்த்து நடப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் சிகிச்சையில் இருந்தபடி சமீபத்தில் வெளியான பாரிக்கரின் வீடியோவில் அவர் பேசும்போது மூச்சு விட சிரமப்படுவதை அறிய முடிந்ததாக காங்கிரஸ் சார்பில் குறிப்பிடப்பட்டது. இது குறித்து பாரிக்கரின் முதன்மை செயலாளர் எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை என போலீஸ் தரப்பு கூறுகிறது.

மேலும் காங்கிரஸ் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் இதுவரை எந்தவித வழக்கும் பதிவு செய்யவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்