டில்லி:
இன்று இசைஅமைப்பாளர் இளையராஜாவின் பிறந்த நாள். அதையொட்டி, அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் புகழாரம் சூட்டி டுவிட் செய்துள்ளார்.
“இந்தியாவின் இன்னிசைத் துடிப்பைத் தீர்மானிக்கும் ஒப்பற்ற கலைஞர் இளையராஜா” என அவரை புகழ்ந்து வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
‘இசைஞானி இளையராஜாவின் 75-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அவருக்கு பலர் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது வாழ்த்துச் செய்திகளை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தமிழில் இளையராஜாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், இந்தியாவின் இன்னிசைத் துடிப்பைத் தீர்மானிக்கும், ஒப்பற்ற கலைஞர் ,இசை மாமேதை, தன்னேரில்லா இளையராஜாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் . இவ்வாண்டுத் தொடக்கத்தில், அன்னாருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கியதை யான் பெற்ற பெரும்பேறாகக் கருதுகிறேன் – குடியரசுத் தலைவர் கோவிந்த்.
இவ்வாறு தமிழ் உள்பட 3 மொழிகளில் பதிவிட்டு, இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருது கொடுக்கப்பட்ட புகைப்படத்தையும் இணைத்து பதிவிட்டுள்ளார்.