மதுரை:

தூத்துக்குடி போராட்டத்தில் பங்கேற்றவர்கள் குறித்து விசாரணை என்ற பெயரில் அவர்களின் குடும்பத்தினருக்கு காவல்துறையினர் தொல்லை கொடுக்கக்கூடாது என்று மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 22ந்தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் அந்த மாவட்டம் முழுவதும் இருந்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டனர். அப்போது, ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து காவல் துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பெண்கள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயமுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

போராட்டத்தில் கலந்துகொண்ட  பலர்  இன்னும் வீடு திரும்பாத நிலையில் அவர்கள் என்ன ஆனார்கள், அவர்களின் நிலை என்ன என்பது கேள்விக்குறியாக உள்ளது.

இந்த சூழலில் காவல்துறையினர் அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று, போராட்டத்தில் பங்குபெற்றவர்கள் குறித்து விசாரணை செய்து வருகிறது. வீட்டில் உள்ள பெண்களிடமும், முதியவர்களிடமும் மிரட்டி வருவதாக வும், நள்ளிரவு நேரத்தில் வந்து தொல்லைகள் கொடுப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த  தங்க பாண்டியன் என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அதில், போலீசாரின் இந்த அத்துமீறும் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரணை செய்த மதுரை உயர்நீதி மன்ற கிளை,  தூத்துக்குடி போராட்டத்தில் பங்கேற்ற வர்களுக்கு  தொல்லை தரக்கூடாது என்றும், . விசாரணை என்ற பெயரில் மக்களை போலீசார் துன்புறுத்தக் கூடாது என்றும் காவல்துறைக்கு உத்தரவிட்டது.

மேலும், கலவரக்காரர்கள் என அடையாளம் காணப்படாதவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்துவது ஏன் என்று கேளவி எழுப்பியது. பொதுமக்களிடம் காவல்துறையினர்  அத்துமீற கூடாது என்றும்  உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் எங்கே? என்றும், . கேமரா பதிவுகள் இல்லாமல் எப்படி கலவரக்காரர்கள் அடையாளம் காணப்பட்டார்கள் என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருக்கிறது.

இது காவல்துறையினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.