ஷில்லாங்:
மேகாலயாவில் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து மாநிலத்தில் ஆட்சி அமைக்க தங்களை அழைக்க வேண்டும் என உரிமை கோர காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
மேகாலயா அம்பட்டி சட்டப்பேரவை தொகுதிக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் காங்கிரஸ் முதல்வர் முகுல் சங்மாவின் மகள் மியானி டி ஷிரா போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அம்பட்டி தொகுதியையும் சேர்த்து காங்கிரசுக்கு மேகாலயாவில் 21 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.
21 எம்.எல்.ஏக்களுடன் மேகாலயாவில் காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக உள்ளது.
60 உறுப்பினர்களை கொண்ட மேகாலயா மாநில சட்டசபைக்கு கடந்த பிப்ரவரி மாதம் தேர்தல் நடந்த நிலையில் மார்ச் 3ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அங்கு ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 30 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை.
மறைந்த சபாநாயகர் பி.ஏ.சங்மாவின் மகன் கன்ராட் சங்மா எம்.பி. தலைமையிலான தேசிய மக்கள் கட்சி 19 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் பாஜக ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.
இந்நிலையில் தற்போது 21 எம்எல்ஏக்களுடன் காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக இருப்பதால், கர்நாடக கவர்னர், அதிக எண்ணிக்கை பெற்ற கட்சியை கர்நாடகாவில் ஆட்சி அமைக்க அழைத்ததுபோல, பெரும்பான்மையாக உள்ள தங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என உரிமை கோரி மாநில ஆளுநர் கங்கா பிரசாத்தை சந்திக்க திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.