டில்லி

பெட்ரோல் விலையை ஒரு பைசா குறைத்ததை பிரதமரின் சேட்டை என ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

நடந்து முடிந்த கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்காக பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றாமல் இருந்தன.   தேர்தல் முடிந்தது முதலே தினமும் விலை உயர்ந்து வந்தது.   நேற்று வரை அந்த விலை உயர்வு தொடர்ந்து வந்தது.    இன்று காலை பெட்ரோல் விலையில் லிட்டருக்கு 60 பைசாவும் டீசல் விலையில் லிட்டருக்கு 56 காசும் குறைப்பதாக செய்தி வந்தது.

ஆனால் வெகு விரைவிலேயே  பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளில் தவறு நேர்ந்துள்ளதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அறிவித்தது.   அத்துடன் விலைகளை மாற்றி அமைத்தது.   மாற்றி அமைக்கப்பட்ட விலையின் படி பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளில் லிட்டருக்கு ஒரு பைசா மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “அன்பு மிக்க பிரதமர் அவர்களே.    பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் ஒரு பைசா குறைத்துள்ளீர்கள்.   இதை நீங்கள் ஒரு சேட்டை என கருதலாம்.   ஆனல் இது மிகவும் மலிவாகவும் சிறுபிள்ளைத் தனமாகவும் உள்ளது,  நான் சென்ற வாரம் அறிவித்த எரிபொருள் விலை சவாலுக்கு ஒரு பைசா குறைவு சரியான பதில் ஆகாது” என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிந்துள்ளார்.