·
`இப்படிப்பட்ட முதல்வரை இந்த நாடே பார்த்தது இல்லை’ என்று – மாதிரி சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடியை கடுமையாக விமர்சித்தார் மு.க.ஸ்டாலின்.
நேற்று நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவர முயற்சித்த தி.மு.க., அமைச்சரவையைக் கூட்டி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது தொடர்பாக முடிவு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. இதற்கு அரசு மறுப்பு தெரிவிக்கவே, இந்தச் சட்டசபை கூட்டத்தொடர் முழுதும் புறக்கணிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
இதற்கிடையே, இன்று அண்ணா அறிவாலயத்தில் மாதிரி சட்டமன்றக் கூட்டம் நடைபெறும் என்றும் அறிவித்தார். அதன்படி இன்று காலை மாதிரி சட்டமன்றக் கூட்டம் துவங்கியது. இதில், தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் தவிர காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி எம்.எல்.ஏ அபுபக்கர், கருணாஸ் எம்.எல்.ஏ உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
அப்போது கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு விவாதம் நடத்தப்பட்டது. அதில் பேசிய மு.க. ஸ்டாலின், “துப்பாக்கிச்சூடு என்ற வார்த்தையே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பயன்படுத்தவில்லை. தன் மக்கள் மீது நடந்த துப்பாக்கிச்சூட்டையே சட்டமன்ற குறிப்புகளில் ளில் இருந்து மறைத்திருக்கும் கொடுமை இந்த ஆட்சியில் நடந்திருக்கிறது. இப்படிப்பட்ட முதல்வரை இதுவரை இந்த நாடு பார்த்ததே இல்லை” என்று சாடினார்.
சுமார் மூன்று மணி நேரத்துக்கும் மேலாக மாதிரி சட்டமன்றக் கூட்டம் நடைபெற்றது. இதன்பிறகு ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, “இந்த ஆட்சி ஒரு நிமிடம் கூட நீட்டிக்கக் கூடாது. அமைச்சரவையைக் கூட்டி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது தொடர்பாக முடிவு எடுக்க வேண்டும். அதன்பிறகு ஆணை வெளியிட வேண்டும். அப்போதுதான் அது முழுமை பெறும். அதைத்தான் தூத்துக்குடி மக்கள் விரும்புகிறார்கள்.
இதை நாங்கள் சட்டமன்றத்தில் எடுத்துக்கூறினோம். பின் அதை ஏற்காததால் வெளிநடப்பு செய்துவிட்டோம். இன்று மாதிரி சட்டப்பேரவையை நடத்தினோம். இதில் அ.தி.மு.க அரசின் அவலங்கள் குறித்து பேசப்பட்டது. இதன் பிறகும் இந்த அரசு கோரிக்கையை நிறைவேற்ற முன்வரவில்லை என்றால் வரும் 2-ம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை நடத்தி அடுத்த கட்டப் போராட்டம் குறித்து முடிவு செய்யப்படும்” என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.