டில்லி:

கோப்ரா போஸ்ட் என்ற புலனாய்வு செய்தி இணையம் கடந்த வெள்ளிக்கிழமை 60 வீடியோக்களை யூ டியூப்பில் வெளியிட்டது. இதில் மத பெறுப்புணர்வு வளர்த்தல், பிரிவினைவாத திட்டம், பாஜக தலைவர்கள் அல்லாத ராகுல்காந்தில மாயாவதி, அகிலேஷ் யாதவ் போன்றவர்களை தரக்குறைவாக விமர்சனம் செய்தல் போன்ற செய்திகளை வெளியிடுவதற்கான பேரம் நடத்தியது.

இதில் இந்தியாவின் முன்னணி நாளிதழ்கள், செய்தி சேனல்கள் இந்த ஒப்பந்தத்திற்கு சம்மதம் தெரிவித்த காட்சிகள் அதில் இடம்பெற்றிருந்தது. இந்த காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது குறித்து தகவல் ஒளிபரப்பு துறை முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான மகேஷ் திவாரி தனது டுவிட்டர் பக்கத்தில் சில பதிவுகளை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘‘கோப்ரா போஸ்டில் வெளியான தகவல்களை கவனமாக கையாள வேண்டும். இது உண்மை என்பது தெரியவந்தால் அச்சு மற்றும் ஒளிபரப்பு ஊடகங்களின் உரிமைகள் ரத்து செய்வது உள்ளிட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எதிர்கால அரசு மேற்கொள்ளும். இந்த காட்சிகளை பிபிசி மற்றும் சர்வதேச மீடியாக்கள் வெளியிட்டுள்ளன. ஆனால், இந்தியாவில் உள்ள மீடியாக்கள் இதை வெளியிடாமல் பாதுகாப்பு அளிக்கின்றன. வருவாயை அதிகரிக்கும் நோக்கத்தில் இத்தகைய செயல்களில் மீடியாக்களின் உரிமையாளர்கள் ஈடுபட்டுள்ளனர்’’ என்றார்.

இவரது கருத்து மூலம் மீடியாக்கள் மீது எதிர்கட்சிகள் கோபத்தில் உள்ளன என்பது தெளிவாகிறது. பணத்திற்காக ஆளுங்கட்சியை ஊக்குவிக்கவும், எதிர்கட்சிகளை அழிக்கவும் மீடியாக்கள் தயாராக இருப்பதை கண்டு எதிர்கட்சி தலைவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.