கோலாலம்பூர்
காணாமல் போன மலேசிய விமானத்தை தேடும் இரண்டாம் கட்டப் பணியை மலேசிய அரசு இன்றுடன் நிறுத்திக் கொண்டுள்ளது.
கடந்த 2014ஆம் வருடம் மார்ச் மாதம் 8 ஆம் தேதி அன்று மலேசிய ஏர்லைன்ஸ் விமானமான எம் எச் 370 கோலாலம்பூரில் இருந்து 239 பேருடன் கிளம்பி பீஜிங்குக்கு சென்றது. கிளம்பி 40 நிமிடங்களுக்குப் பிறகு அந்த விமானம் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பில் இருந்து விலகியது. அதன் பிறகு அந்த விமானம் என்ன ஆனது என இன்று வரை தெரியவில்லை.
இந்த விமானத்தை தேட அரசு அமைத்த முதற்கட்ட பணிகளில் ஒரு சில விமான பாகங்கள் கடலில் மிதப்பது கண்டறியப்பட்டது. அதனால் இந்த விமானம் கடலில் விழுந்து முழுகி இருக்கலாம் என ஊகிக்கப்பட்டது. மேற்கொண்டு ஏதும் தடயம் கிடைக்காத நிலையில் இந்த விமானத்தை தேடும் பணியின் இரண்டாம் கட்டம் தொடங்கியது.
மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் இந்த விமானத்தை தேடும் இரண்டாம் கட்டப் பணிகளுக்காக அமெரிக்க நிறுவனம் ஒன்றை ஒப்பந்தத்தில் அமர்த்தினார். அந்த நிறுவனம் தனது கப்பல் மூலம் இந்தியப் பெருங்கடலில் சுமார் 80000 சதுர கிமீ பரப்பளவுக்கு இதுவரை தேடி உள்ளது. ஆனால் அந்த விமானம் கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்நிலையில் புதியதாக பதவி ஏற்றுள்ள மலேசிய அரசு இன்றுடன் இந்த விமானத்தை தேடும் இரண்டாம் கட்டப் பணிகளை நிறுத்திக் கொண்டுள்ளது. இதற்கான மூன்றாம் கட்டப் பணிகள் குறித்த தகவல்களை அரசு தெரிவிக்கவில்லை.