கோலாலம்பூர்
மலேசிய அரசு புதிய இந்து அறநிலையத்துறை அமைக்க இருப்பதற்கு மலேசிய இந்து அமைப்புக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன
மலேசியாவில் உள்ள இந்து ஆலயங்கள் அனைத்தும் கடந்த 1964ஆம் ஆண்டு முதல் மலேசிய இந்து சங்கத்தினரால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. தற்போது பதவி ஏற்றுள்ள மகாதீர் அரசு புதியதாக இந்து அறநிலையத் துறை ஒன்றை அமைத்து அனைத்து இந்து ஆலயங்களையும் இந்த துறையின் கீழ் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
இதற்கு அனைத்து இந்து அமைப்புகளும் இந்து ஆலயங்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது குறித்து மலேசிய இந்து சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரு சில ஆலயங்கள் செய்யும் தவறுகளை முன்னிருத்திக் கொண்டு, நாட்டில் முறையாக இயங்கி கொண்டிருக்கும் ஆலயங்கள் உட்பட அனைத்து ஆலயங்களையும் கட்டுப்படுத்தி அரசாங்க அமைப்புடன் வைத்துக் கொள்வது முறையான ஒரு செயல் அல்ல. 1964ஆம் ஆண்டு முதல் இன்று வரை மலேசிய இந்து சங்கம், இந்நாட்டில் உள்ள ஆலயங்கள் மற்றும் இந்து சமயத்தைக் காத்து வருவது அனைவரும் அறிந்த ஒன்றே.
அரை நூற்றாண்டாய் மலேசிய இந்து சங்கம் சமய வளர்ச்சிக்கு அளப்பரிய பங்கினை ஆற்றி வரும் வேளையில், இந்து அறநிலையத் துறாஇ அமைக்க வேண்டி முன்வைக்கப்பட்ட கருத்துகள் யாவற்றையும் மலேசிய இந்து சங்கம் ஏற்கனவே செய்து வருவது குறிப்பிடத்தக்கது. அதேவேளையில் சில விசயங்களில் மலேசிய இந்து சங்கத்திற்கு தகுந்த அதிகாரம் இல்லாத ஒரே காரணத்தால் பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது ஆட்சியில் உள்ள அரசாங்கம் மலேசிய இந்து சங்கத்திற்கு முறையான அதிகாரத்தை வழங்கினால் ஆலயச் செயல் நடவடிக்கைகள் மற்றும் நிர்வாகப் பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வு காண வழி பிறக்கும். அதனை விடுத்து, இதற்காக ஒரு துறைய அமைத்து அதன் மூலமாக இக்காரியங்களைச் செய்ய நினைப்பது வருத்தற்குரிய விசயமாகும்.
அரசாங்கத்தால் அமைக்கப்படும் இந்து அறநிலையத் துறை, அரசின் முழு கட்டுப்பாட்டில் தான் இருக்கும் என்பதற்கு பினாங்கு இந்து அறப்பணி வாரியம் ஓர் உதாரணம். இன்றைய அரசாங்கம் ஒரு துறையை அமைத்து, ஆலயங்கள் மற்றும் அதன் சொத்துகளை அரசாங்க கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தால், பிற்காலத்தில் ஆட்சி மாற்றமோ அல்லது முக்கிய தலைவர்களின் மாற்றமோ அல்லது மதவாத அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலோ நமது இந்து ஆலயங்களின் நிலை என்னவாகும்?
இம்மாதிரியான ஒரு சம்பவத்தை நம் சமுதாயம் ஏற்கனவே அனுபவித்து இருப்பது நமக்கு தெரிந்த உண்மையே. அதுதான் ‘South Indian Labour Fund’. அதன் நிலை இன்று என்ன என்பது அனைத்து இந்தியர்களுக்கும் தெரியும். அதன் கீழ் உருவாக்கப்பட்ட ஆறுமுக பிள்ளை கல்லூரியின் பெயர் மட்டுமே தமிழினத்தைச் சார்ந்து இருக்கிறதே தவிர அங்கு இந்தியர்களுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை என்பது தான் உண்மை. இதே நிலை, இந்து அறப்பணி வாரியத்திற்கும் அது கொண்டுள்ள சொத்துடைமைகளுக்கும் வராது என்று யாரும் உறுதிப்படுத்த முடியுமா?
பத்துமலை மறுசீரமைப்பு பேரணி காலத்திற்கு ஏற்ற ஒன்றாக இருந்தாலும் அதில் அவசரம் காட்டாமல் தீர ஆலோசித்து ஆலய நிர்வாக அறங்காவலர்கள் மற்றும் மலேசிய இந்து சங்க பொறுப்பாளர்களை அழைத்து முறையான பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் நல்லதொரு தீர்வை இந்த அரசாங்கம் எடுக்க வேண்டும் என்று இவ்வேளையில் மலேசிய இந்து சங்கம் கேட்டுக் கொள்கிறது.
பத்துமலை தேவஸ்தானம் மீதான எதிர்ப்பினை மையமாக கொண்டு நாட்டில் உள்ள அனைத்து ஆலயங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க நினைப்பது சரியல்ல. இந்து அறநிலையத் துறையை அமைக்கும் முன், நாட்டில் உள்ள முக்கிய ஆலயங்களோடும் மலேசிய இந்து சங்கத்தோடும் கலந்து ஆலோசித்து இப்பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான ஒரு சிறந்த வழிமுறையை கண்டறிந்து செயல்பட வேண்டும் என பக்காத்தான் ஹரப்பான் அரசாங்கத்தை மலேசிய இந்து சங்கம் கேட்டுக் கொள்கிறது.
இந்து சமய வளர்ச்சியில் கடந்த கால அரசாங்கம் செய்த அதே தவற்றை இந்த அரசாங்கம் செய்து விடக் கூடாது என்பதே மலேசிய இந்து சங்கத்தின் தாழ்மையான வேண்டுக்கோள்.
நம் நாட்டில் உள்ள மற்ற எந்த சமயத்திற்கும் இம்மாதிரியான வாரியங்கள் அமைக்கப்பட்டது கிடையாது என்பது முக்கியமானது. சர்வ சமய மன்றத்தில் இடம்பெற்றுள்ள மற்ற சமயத்தினர் இடையிலான கலந்துரையாடலின் போது இது தெரியவந்ததோடு இந்து அறப்பணி வாரியம் அமைக்கப்படுவதற்கு அவர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சிங்கப்பூரிலும் பினாங்கிலும் அமைக்கப்பட்டுள்ள இந்து வாரியங்கள் தங்களின் கீழ் பதிவுப் பெற்ற ஆலயங்களைத் தவிர்த்து மற்ற ஆலயங்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தைக் கொண்டிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதுபோலவே, வாரியத்தின் கீழ் பதியப்பட்டுள்ள ஆலயங்களில் அதன் நிர்வாகம் பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை. மாறாக, அரசில் உள்ள கட்சியினைச் சேர்ந்தவர்களால் நியமிக்கப்படுகிறார்கள். இதனால், அவ்வட்டாரத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் ஆலய உறுப்பினர்களின் உரிமை பறிக்கப்பட்டுள்ளது என்பது முக்கியமானது.
தேர்தல் காலத்தில், கொள்கையறிக்கையில் கூறப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக அனைத்து மாநிலங்களிலும் இந்து அறப்பணித் துறையை அமைக்க அரசு அவசரம் காட்டாமல் அனைத்து கோணங்களிலும் ஆராய்ந்து சிறந்த முடிவு எடுக்க வேண்டும் என மலேசிய இந்து சங்கம் கேட்டுக் கொள்கிறது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.