மும்பை:
மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் இடைத்தேர்தல் வரும் 28ம் தேதி நடக்கிறது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநில பாஜக முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பேசியதாக ஒரு ஆடியோவை சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே வெளியிட்டுள்ளார். பால்கர் இடைத்தேர்தலில் சிவசேனாவுக்கு எதிராக பாஜக சதி செய்கிறது என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
அந்த ஆடியோவில், ‘‘சிவசேனா நம்மை முதுகில் குத்திவிட்டது. நம்மை நண்பன் என்று அழைத்த எந்த ஒரு கட்சியானாலும் நம்மை முதுகில் குத்தினால் அக்கட்சிக்கு நாம் யார்? என்பதை காட்ட வேண்டும். பாஜக ரத்தம் ஓடும் யாரும் இதை கண்டு அமைதியாக இருக்கமாட்டார்கள். அவர்களை நாம் பெரிய அளவில் தாக்க வேண்டும்.
அவர்களுக்கு நாம் யார் என்பதை புரிய வைக்க வேண்டும். நான் உங்களுக்கு என்ன கூறுகிறேன் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்த தேர்தலில் நாம் கடுமையாக போராடி வெற்றி பெற்று அவர்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டும். நான் உங்களுக்கு பின்னால் பக்க பலமாக இருப்பேன். எந்த முறையிலான பித்தலாட்ட வழிகளையும் பின்பற்றி வெற்றி பெற்றாக வேண்டும்’’ என இடம்பெற்றுள்ளது.
இது தேவேந்திர பட்னாவிஸ் பேசிய ஆடியோ என்று குற்றம்சாட்டியுள்ள சிவசேனா இது குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் செய்துள்ளது. ஆனால், இந்த குற்றச்சாட்டை பாஜக மறுத்துள்ளது. ‘‘இது உண்மையான ஆடியோ கிடையாது. இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் முறையிடுவோம். நாங்கள் உண்மையான ஆடியோவை வெளியிடுவோம்’’ என்று பாஜக செய்தி தொடர்பாளர் மாதவ் பண்டாரி தெரிவித்துள்ளார்.
‘‘இந்த ஆடியோ விவகாரம் குறித்த தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த வேண்டும். ஆடியோவில் பதிவாகியுள்ள குரலை பரிசோதனை செய்ய வேண்டும்’’ என்று முன்னாள் முதல்வர் அசோக் சவான் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.