டில்லி:
2019ம் ஆண்ட நடைபெறவுள்ள லோக்சபா தேர்தலில் இந்துத்வா ஆதரவு செய்திகளை வெளியிடும் வகையில் நாடு முழுவதும் தேர்வு செய்யப்பட்ட பத்திரிக்கைகளிடம் கோப்ரா போஸ்ட் என்ற நிறுவனம் பேரம் பேசும் ஆபரேஷனை நடத்தியது. இதில் இந்தியாவில் உள்ள பல முன்னணி நாளிதழ்கள், சேனல்கள் இந்த விளம்பரத்தை வெளியிட சம்மதம் தெரிவித்த வீடியோ, ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வகையில் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த 2 நாளிதழ்கள் இந்த ஒப்பந்தத்தை ஏற்க மறுத்த தகவல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. பெங்காலி நாளிதழான பர்தமன் பத்திரிகா, கோப்ரா போஸ்ட் நிருபரின் ஒப்பந்தத்தை ஏற்க மறுத்துள்ளது. இந்நிறுவன விளம்பர பிரிவு மேலாளர் ஆசிஷ் முகர்ஜியிடம், விளம்பர கட்டணம் ரூ. 1.5 கோடியில் இருந்து ரூ. 10 கோடி வரை உயர்த்திய போதும் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதைதொடர்ந்து மேற்கு வங்கத்தை சேர்ந்த மற்றொரு நாளிதழான தைனிக் சாம்பேட் என்ற நிறுவனமும் ஏற்க மறுத்துவிட்டது. இவர்கள் மதம் சார்ந்த எந்த செய்தி, கட்டுரைகளை வெளியிட மாட்டோம் என்று கூறி மறுத்துள்ளனர்.
இந்த இரு பத்திரிக்கைகளின் செயல்பாட்டால் நாட்டில் உள்ள அனைத்து பத்திரிக்கைகளையும் விலைக்கு வாங்க முடியாது என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக கோப்ரா போஸ்ட் தெரிவித்துள்ளது.