மால்டா, மேற்கு வங்கம்
மேற்கு வங்கத்தில் ஓடும் ரெயில் ஒரு இஸ்லாமிய இளைஞரை நான்குபேர் அடித்துள்ளனர்.
இந்த மாதம் 14 ஆம் தேதி அன்று ஒரு இஸ்லாமிய இளைஞர் ஹௌராவில் இருந்து மால்டாவுக்கு ரெயிலில் பயணம் செய்துள்ளார். வெளியூரில் இருந்து வந்து கூலி வேலை பார்க்கும் இளைஞரான அவர் அருகில் நான்கு பேர் வந்து அமர்ந்துள்ளனர். அவர்கள் இந்த இளைஞரிடம் பேச்சுக் கொடுத்துள்ளனர். இந்த இளைஞரும் அவர்களுடன் பேசத் தொடங்கி உள்ளார்.
அதிகம் படிப்பறிவு இல்லாத அவரிடம் பிரதமர், ஜனாதிபதி, மற்றும் மேற்கு வங்க முதல்வரின் பெயர்கள் என்ன எனக் கேட்டுள்ளனர். அத்துடன் தேசிய கீதத்தை பாடிக்காட்ட சொல்லி உள்ளனர். அவருக்கு அதில் மேற்கு வங்க முதல்வர் பெயரைத் தவிர வேறொன்றும் தெரியவில்லை. அத்துடன் தேசிய கீதமும் ஒரு வரி கூடத் தெரியவில்லை.
தான் அதிகம் படிக்காதவன் என்பதால் தேசிய கீதம் தெரியாது என கூறி உள்ளார். இதற்கு அந்த நால்வர் அடங்கிய கும்பல், “நீ படிக்காதவன் என்பதால் உனக்கு தேசிய கீதம் தெரியாது என்கிறாயே, இஸ்லாமிய தொழுகையான நமாஸ் மற்றும் எப்படி தெரியும்?” எனக் கேட்டு அவரைக் கன்னத்தில் அடித்துள்ளனர்.
அத்துடன் முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் பெயரை அந்த இஸ்லாமிய இளைஞர் சரியாக கூறியதால் அவரை நால்வரும் சேர்ந்து அடித்துள்ளனர். பிறகு பாண்டெல் ரெயில் நிலையத்தில் அவர்கள் இறங்கி விட்டனர். அந்தப் பெட்டியில் இருந்த ஒரு சமூக ஆர்வலர் இது குறித்து புகார் அளித்துள்ளார். புகார் மீதான விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.