லக்னோ:
நான்கு ஆண்டு கால பாஜக ஆட்சியில் ஏமாற்றமே மிச்சம் என்று மாயாவதி தெரிவித்துள்ளார்.
மத்தியில் மோடி அரசு இன்று தனது நான்கு ஆண்டுகாலத்தை பூர்த்தி செய்துள்ளது. இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறுகையில்,‘‘ தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பல கட்சிகள் வெளியேறி வருகிறது. இது பாஜக ஆட்சி அனைத்து மட்டத்திலும் ஏமாற்றத்தை அளித்துள்ளது என்பதை உறுதி செய்யும் வகையில் உள்ளது.
மத்திய பாஜக ஆட்சி தோல்வியை தழுவியுள்ளது. ஏழைகள், தொழிலாளர்கள், பொதுமக்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரிடமும் இது போன்று சுரண்டப்படுவதை இதற்கு முன்பு யாரும் பார்த்ததும் கிடையாது. கேள்விபட்டதும் கிடையாது.
பாஜக மற்றும் பிரதமர் மோடி வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அதனால் நம்பிக்கையை இழந்துவிட்டனர். இதன் மூலம் அவர்களது திறனற்ற ஆட்சி வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களது சொந்த கட்சியினரே அவர்கள் கூறுவதை காது கொடுத்து கேட்பதில்லை. இதுவே பாஜக அரசுக்கு கவுன்ட் டவுன் தொடங்கிவிட்டதை காட்டுகிறது’’ என்றார்.
மேலும், அவர் கூறுகையில், ‘‘முதலாளிகளுக்கு முன்பு பாஜக அரசு மண்டியிட்டு கிடக்கிறது. இதனால் நாட்டின் பொருளாதாரம் பாதித்து மக்கள் அவதிப்படுகின்றனர். வங்கியில் இருக்கும் பணம் பாதுகாப்பாக உள்ளதா? இல்லையா? என்ற சந்தேகம் மக்களுக்கு எழுந்துள்ளது. அன்றாட வாழ்க்கையில் அராஜகம் நிறைந்துள்ளது. இது பாஜக ஆட்சியின் காட்டு தர்ப்பாரை எடுத்துக் காட்டுகிறது.
பாஜக.வினர் அனைத்து விதமான சட்டவிரோத செயல்களிலும், குற்றங்களிலும் ஈடுபடுகின்றனர். உன்னாவ், காதுவா ஆகிய இடங்களில் நடந்த பாலியல் பலாத்கார சம்பவங்கள் அக்கட்சியினரில் உண்மையான முகத்தை வெளிப்படுத்தியுள்ளது’’ என்றார்.