டில்லி
தூத்துக்குடி சம்பவம் குறித்த் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் டிவிட்டர் பதிவுக்கு அவர் ஃபாலோயர்ஸ் அதிரடி பதில் அளித்துள்ளனர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டத்தில் வன்முறி வெடித்தது. இதனால் காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் 12 பேர் வரை இறந்ததாகவும் 65க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கு நாடெங்கும் உள்ள பொதுமக்களும், அரசியல் தலைவர்களும் இதற்காக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது டிவிட்டரில், “தமிழ்நாட்டில் உள்ள தூத்துக்குடியில் நடந்த போராட்டத்தில் விலை மதிப்பற்ற பல உயிர்களை இழந்ததில் நான் மிகவும் துயர் அடைந்துள்ளேன். மத்திய உள்துறை அமைச்சகம் இந்த நிலை குறித்து கவலை கொண்டுள்ளது. தமிழ்நாடு அரசிடம் இருந்து இந்த சம்பவம் குறித்து அறிக்கை அளிக்க கேட்டுக் கொண்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.
அவரின் இந்த அறிக்கைக்கு அவர் ஃபாலோயர்ஸ் தங்கள் பின்னூட்டத்தில் சரியான பதிலடி அளித்துள்ளனர்.
ஒருவர் ”அட! உள்துறை அமைச்சர் மூன்றே நாட்கள் கழித்து விழித்துக் கொண்டுள்ளார். வாழ்த்துக்கள். எங்களுக்கு உங்கள் அனுதாபம் தேவை இல்லை. தாங்கள் தயவு செய்து உங்கள் தூக்கத்தை தொடரலாம்” எனக் கூறி உள்ளார்.
மற்றொருவர், “அன்புள்ள ராஜ்நாத்சிங்ஜி, தூத்துக்குடியில் உள்ள மக்களை பயங்கரவாதிகளைப் போல் நடத்த வேண்டாம். இணைய வசதியை அளியுங்கள். அவர்கள் மீண்டும் தங்கள் சாதாரண வாழ்க்கை வாழ உதவி செய்யுங்கள்” என பதில் அளித்துள்ளார்.
வேறு ஒருவர், ”மத்திய அரசுக்கு குடியரசின் மாண்பின் மேல் நம்பிக்கை இருந்தால் அதற்கேற்ற நடவடிக்கை எடுக்கவும். உலகின் எந்தப் பகுதியிலும் தன்னுடைய நாட்டு மக்களையே அரசு அழிக்கும் கொடுமை நடக்காது” என பதிந்துள்ளார்.