தூத்துக்குடி:
தூத்துக்குடி வன்முறையின்போது காயம் அடைந்தவர்கள் மற்றும் மரணம் அடைந்தவர்களின் உறவினர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் குவிந்து வருவதால், அரசு மருத்துவமனை வளாகத்தில் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக பதற்றம் நிலவி வருகிறது.
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடிய மக்கள்மீது காவல்துறை நடவடிக்கை நடத்திய காட்டுமிராண்டித்தனமான துப்பாகி சூட்டில் 13 பேர் உயிரிழந்துள்ள நிலையில் ஏராளமானோர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் உடல்கள் சென்னை உயர்நீதி மன்ற உத்தரவுபடி பதப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் காயம் அடைந்தவர்களின் உறவினர்களும் மருத்துவமனையில் குவிந்துள்ளனர்.
இதன் காரணமாக மருத்துவமனையில் சுமார் 500க்கும் மேற்பட்ட அதிரடி போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். நேற்று இரவு முழுவதும் தூத்துக்குடி பகுதியில் உள்ள வீடுகளில் புகுந்து ஆண்களையும், இளைஞர்களையும் இழுத்து சென்ற போலீசார், தற்போது மருத்துவமனை வளாகத்தில் குவிக்கப்பட்டிருப்பது மேலும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி அரசு பொது மருத்துவமனை வளாகம் உள்ளே சந்தேகத்துக்கு இடமாக சுற்றித்திரிபவர்களை கைது செய்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக அரசு இணையதள சேவைகளை முடக்கி உள்ள நிலையில், அங்கு போலீசாரின் அத்துமீறல்கள் எல்லை மீறி போய்க்கொண்டிருப்பதாகவும், இது மிகப்பெரிய பிரச்சினைக்கு வழிவகுக்கும் என்றும் சமூக ஆர்வல்கள் அச்சம் தெரிவித்து உள்ளனர்.