டில்லி:
நாடு முழுவதும் விமான சேவைகள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்களும் விமான பயணத்தையே அதிக அளவில் விரும்ப தொடங்கி உள்ளனர்.
குறைந்த கட்டணம், குறுகிய நேரத்தில் பயணம் போன்ற காரணங்களால் கடந்த 10 ஆண்டுகளில் இந்திய விமான பயணிகளின் எண்ணிக்கை 6 மடங்கு உயர்ந்துள்ளதாக விமான சேவை நிறுவனங்கள் தெரிவித்து உள்ளன.
இந்த நிலையில், தவிர்க்க முடியாத நிலையில் விமான டிக்கெட்டை ரத்து செய்தால், அதற்கான கட்டணம் திரும்ப ஒப்படைக்க கோரி விமான பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதை பரிசீலிப்பதாக அரசு தெரிவித்து வந்த நிலையில், தற்போது விமான டிக்கெட்டை ரத்து செய்தால், அதற்கான கட்டணத்தை திரும்ப பெற புதிய விதிகள் உருவாக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில்,
விமானம் இயந்திர கோளாறு அல்லது விமானத்தை இயக்கும் நிறுவனம் சார்பான காரணத்தினால் ரத்து \ தாமதமானால் மட்டுமே பணத்தை திருப்பி பெறமுடியும்.
பயணம் துவங்கும் 24 மணி நேரத்துக்கு முன் விமானம் ரத்தானால் முழு பணத்தையும் திருப்பிப் தர வேண்டும்.
விமானம் 4 மணி நேரத்துக்கு மேல் தாமதமாகும் பட்சத்தில், பயணிகளுக்கு முழு பணத்தையும் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும்.
தாமதத்தால் விமானம் அடுத்த நாள் புறப்படும் நிலை ஏற்பட்டால், பயணிகளுக்கு தங்கும் வசதி செய்து தரப்பட வேண்டும்.
கனெக்ஷன் பிளைட் என்று அழைக்கப்படும் இணைக்கும் விமானங்கள் 3 மணிநேரத்துக்கு மேல் தாமதமானால் 5000 ரூபாயும், 4-ல் இருந்து 12 மணி நேரத்துக்கும் மேல் தாமதமானால் 10,000 ரூபாயும் இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.
விமானம் ரத்தானால் 2 மணிநேரத்துக்குள் மாற்று விமானம் ஏற்பாடு செய்துத்தர வேண்டும்.
உள்ளூர் விமான டிக்கெட்டை புக் செய்த 24 மணிநேரத்துக்குள் கேன்சல் செய்யும் பட்சத்தில், கேன்சலேசன் சார்ஜ் ஏதும் செலுத்த தேவையில்லை. ஆனால், பயணத்துக்கு 4 நாட்கள் முன் கேன்சல் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
லக்கேஜ் தொலையும் பட்சத்தில், கிலோ ஒன்றுக்கு 3000 ரூபாயும், லக்கேஜ் வந்து சேர தாமதமானால் அல்லது சேதமானால் கிலோ ஒன்றுக்கு 1000 ரூபாயும் இழப்பீடாக அளிக்கப்படவேண்டும்.
விமானம் புறப்படாமல், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பயணிகளை உள்ளடக்கி இருந் தால், பயணிகளுக்கு இலவசமாக உணவு மற்றும் பானங்கள் வழங்கப்பட வேண்டும்.
இந்த நிலை இரண்டு மணி நேரதுக்கும் மேலாக நீடித்தால், பயணிகள் விமானத்தில் இருந்து வெளியேற அனுமதிக்கப்பட வேண்டும்.
விமான பயணிகளுக்கு உதவும் விதத்தில் அமைந்துள்ள இந்த விதிமுறைகள் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.