விதிஷா, மத்தியப் பிரதேசம்
விவசாய விளைபொருட்களை வாங்க அரசு கொள்முதல் நிலையத்தில் தாமதம் ஆனதால் விவசாயி ஒருவர் மரணம் அடைந்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் விவசாயிகளின் இடத்திலேயே வந்து விளைபொருட்கள் கொள்முடல் செய்யப்படும் என அரசு அறிவித்தது. ஆயினும் ஆள் பற்றாக்குறையை காரணம் காட்டி அந்த நடவடிக்கை மேற்கொள்ளப் படவில்லை. இதனால் விவசாயிகள் தங்களது விளை பொருட்களை அரசு கொள்முதல் நிலையத்துக்கு கொண்டு போய் விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசம் விதிஷா மாவட்டத்தில் உள்ள பீஜுகேடி என்னும் கிராமத்தில் குடும்பத்துடன் மூல்சந்த் (வயது 65) என்னும் விவசாயி வசித்து வருகிறார். இவர் விதிஷாவில் உள்ள அரசு கொள்முதல் நிலையத்துக்கு தனது விளை பொருட்களை வாடகை டிராக்டரில் ஏற்றிக் கொண்டு சென்றுள்ளார். அங்கு இவரைப் போல் ஏராளமான விவசாயிகள் காத்துக் கொண்டு இருந்தனர். தற்போது மத்தியப் பிரதேசத்தில் வெப்பம் 43 டிகிரியையும் தாண்டி உள்ளது.
இந்த வெயிலில் விவசாயிகள் தங்களது விளை பொருட்களை எடைபோட்டு விற்க காத்துக் கொண்டு இருந்துள்ளனர். நாட்கணக்கில் காத்துக் கிடக்க நேரிட்டதால் சரியான உணவும், தங்க இடமும் இன்றி வெயிலில் விவசாயிகள் வாட்டம் அடைந்தனர். இந்நிலையில் பட்டினி மற்றும் வெயில்காரணமாக மூல்சந்த் மயக்கம் அடைந்தார். அவருடைய மகனும் மற்ற விவசாயிகளும் அவருக்கு அவசர சிகிச்சை அளிக்க முயன்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதை அறிந்து அவர்கள் அதிர்ந்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் அரசு கொள்முதல் நிலையத்தின் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தை தொடங்கினர். மரணமடைந்த மூல்சந்த் குடும்பத்தினருக்கு ரு.10 லட்சம் இழப்பீடும் அவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணியும் கோரி கோஷம் எழுப்பினர். அரசு அதிகாரிகள் விரைந்து வந்து அவர்களை சமாதானப்படுத்தி கலைத்து உள்ளனர்.
இந்த நிகழ்வு மத்தியபிரதேச மாநிலத்தில் கடும் பரப்பரப்பை உண்டாக்கி உள்ளது.