புவனேஸ்வர்:
ஒடிசாவில் ராணுவ ஆயுத உற்பத்தி தொழிற்சாலை வழித்தடம் அமைக்க வேண்டும் என்று அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், ‘‘ஒடிசாவில் அனைத்து தொழிற்சாலை உள்கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுசூழலுக்கு ஏற்ற வசதிகள் இங்கே உள்ளது. அதனால் ராணுவ ஆயுத தயாரிப்பு தொழிற்சாலை மற்றும் ஏரோனாடிக்கல் பல்கலைக்கழகத்தையும் இங்கே அமைக்க வேண்டும்.
இங்கு இரும்பு, அலுமினியம், ஸ்டெயின்லஸ் ஸ்டீல் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இது ராணுவம் மற்றும் வின்வெளி சார்ந்த தயாரிப்புகளுக்கு உதவியாக இருக்கும். செயில், டாடா ஸ்டீல், ஹிண்டால்கோ, நால்கோ ஆகிய தொழிற்சாலைகள் இங்கே செயல்படுகிறது. போதுமான மனித வள ஆற்றலும் உள்ளது.
ஐஐடி, என்ஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐஎஸ்இஆர், எக்ஸ்ஐஎம்பி போன்ற உயர்கல்வி நிறுவனங்களும் ஒடிசாவில் சிறந்த முறையில் செயல்படுகிறது. அதனால் இங்கு ராணுவ ஆயுத தொழிற்சாலை வழித்தடம் மற்றும் ஏரோனாடிக்கல் பல்லைக்கழகம் அமைக்க வேண்டும். இதற்கு வேண்டிய உதவிகளை மாநில அரசு விரைந்து மேற்கொள்ளும்’’ என்று தெரிவித்துள்ளார்.