மும்பை:

தொலைத் தொடர்பு சேவையில் ரிலையன்ஸ் ஜியோ சேவை தொடங்கி பின்னர் இத்துறையில் வேலையிழப்பு அதிகரித்துள்ளது. 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலையிழந்திருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து டெலிகாம் செயலாளர் அருணா சுந்தர்ராஜன் கூறுகையில்,‘‘தொலைத் தொடர்பு துறையில் வேலையிழந்தவர்களுக்கு மாற்று பணி கிடைக்க அரசு உதவிச் செய்யும். இந்த துறையில் 3 கட்டங்களாக தொழிலாளர்கள் பணியாற்றினர். இதில் முதலில் சில்லறை விற்பனை நிலையங்களில் பணியாற்றியவர்கள் மீது கவனம் செலுத்தப்படும்.

அதற்கு முன்பு இந்த துறையை நிலைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பொது வைஃபை மற்றும் பாரத் நெட் என்று இரு வகைகளில் புதிய வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். இது கீழ்மட்ட தொழிலாளர்களுக்கு பயனளிக்கும். மேலும், டெலிகான் ஸ்கில் கவுன்சிலுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புதிய வேலைவாய்ப்புகளை பெறும் வகையில் அவர்களுக்கு உதவுவது குறித்து இதில் முடிவு செய்யப்படும்’’ என்றார்.