நாடு முழுவதும் ஏன்… உலகம் முழுவதுமே இன்று இந்தியாவின் கர்நாடக மாநிலத்தை உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறது.

ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்து வரும் பாரதியஜனதா அரசின் முகமூடி, கொஞ்சம் கொஞ்சமாக கிழிந்துகொண்டிருக்கிறது. இது நாட்டு மக்களுக்கும் தெரிய வந்துள்ளது.

நாடு முழுவதும் 20 மாநிலங்களில் ஆட்சி நடத்தி வரும் பாரதிய ஜனதாவின் உண்மையான முகம், உச்சநீதி மன்றம் கொடுத்த சம்மட்டி அடியின் காரணமாக  தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

20 மாநிலங்களில் ஆட்சி செய்து வரும் பாஜ 9 மாநிலங்களில் மட்டுமே பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. மற்ற மாநிலங்களில் குதிரைபேரம் நடத்தியும், எதிர்கட்சிகளை சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்ற மத்தியஅரசு நிறுவனங்கள் மூலம் மிரட்டி பணியவைத்து, ஆதரவை பெற்று ஆட்சியை கைப்பற்றி வந்துள்ளது.

இதற்கு எல்லாம் முத்தாய்பாக கடந்த வாரம் நடைபெற்ற கர்நாடக சட்டமன்ற தேர்தலிலும் பெரும்பான்மை இல்லாத நிலையில், கவர்னர் மூலம் ஆட்சியை கைப்பற்றி உள்ளது.

இந்த மக்கள் விரோத செயலுக்கு உலகம் முழுவதும் வசித்து வரும் இந்தியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். உச்சநீதி மன்றமும் கடும் கண்டனத்தை தெரிவித்து, இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டுள்ளது.

இந்த பரபரப்பான சூழலில் இன்று கர்நாடக சட்டமன்றம் கூடுகிறது.

கர்நாடகாவில் 222 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் அருதிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜ 104 இடங்களையும், காங்கிரஸ் 78 இடங்களையும், மதசார்பற்ற ஜனதாதளம் 38 (ஜேடிஎஸ்) இடங்களையும் கைப்பற்றி உள்ளது.

இந்நிலையில், 116 இடங்களை பெற்ற ஜேடிஎஸ்-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்க கவர்னரை சந்தித்து உரிமை கோரியது. அதேவேளை யில் பாஜகவும் ஆட்சி அமைக்க உரிமை கோரியது. ஆனால், கவர்னரின் கண்ணுக்கு 116ஐ விட 104தான் பெரிதாக தெரியவந்தது.

அதன் காரணமாக பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்து, எடியூரப்பாவுக்கு முதல்வராக பதவி பிரமாணமும் செய்து வைத்தார்.

இதில் ஆச்சரியப்பட வைக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், சட்டமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்க எடியூரப்பா 7 நாட்கள் அவகாசம் கோரியிருந்த நிலையில், அவருக்கு நாட்கள் அவகாசம் கொடுத்து, ஆச்சரியத்தையும்,  குதிரை பேரத்துக்கும் பிள்ளையார் சுழி போட்டார் ஆளுநர் வகுபாஜ் வாலா என்ற குஜராத்தி.

இதை எதிர்த்து காங், மஜத கட்சிகள் சார்பில் உச்சநீதி மன்றத்தில் தொடுத்த அதிரடி வழக்கு காரணமாக இன்று எடியூரப்பாவின் தலைக்கு மேல் கத்தி தொங்கிக்கொண்டிருக்கிறது.

உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், பெரும்பான்மை இல்லாத நிலையில், பாரதிய  ஜனதாவை ஆட்சி அமைக்க கவர்னர் அழைத்தது சட்ட விரோதம் என்றும், எனவே எடியூரப்பா முதல்-மந்திரியாக பதவி ஏற்க தடைவிதிக்க வேண்டும் என்றும் கூறி இருந்தனர்.

ஆனால், நமது ஜனநாயக நாட்டில் சட்டங்களும், சாசனங்களும் வினோதமாகத்தான் உள்ளது என்பது போன்ற நிகழ்வுகளின் மூலமே தெரிய வருகிறது.

மாநில கவர்னர், சபாநாயகர் போன்றோரின் எதேச்சதிகரமான முடிவில் தலையிட தயங்கி வருகிறது.

இதற்கிடையில் நள்ளிரவில் வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம், கவர்னரின் நடவடிக்கை குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது. எடியூரப்பா பதவி ஏற்க தடை விதிக்கவும் மறுத்துவிட்டது. ஆனால், இறுதி தீர்ப்பு முதல்வரின் பதவியை கட்டுப்படுத்தும் என்று கூறியது.

இதைத்தொடர்ந்து காலை 9 மணிக்கு அவசரம் அவசரமாக எடியூரப்பாவுக்கு மட்டும் கவர்னர் முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைத்தார்.  அவரும் பதவி ஏற்றவுடன் விவசாய கடன் தள்ளுபடி என்ற ஒரு கோப்பில் கையெழுத்திட்டுவிட்டு, குதிரை பேரத்துக்கு கிளம்பிவிட்டார்.

இந்த நிலையில், நேற்று கவர்னரின் முடிவுக்கு  எதிரான வழக்கு மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை உச்சநீதி மன்ற நீதியரசர்கள் ஏ.கே.சிக்ரி, எஸ்.ஏ.பாப்டே, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

பிரபலமான வழக்கறிஞர்கள் ஆஜராகி காரசாரமாகத்தான் வாதாடினார்கள்…  விசாரணையும் நடைபெற்றது…

ஆனால், என்ன பிரயோஜனம்…  சட்டவிரோதமாக பதவி ஏற்ற எடியூரப்பாவை பதவி நீக்கம் செய்யவோ, கவர்னரின் முடிவை கண்டிக்கவோ திராணியற்ற நீதிமன்றங்கள், சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டும் என்று உத்தரவிட்டு வாயை மூடிக்கொண்டது.

உச்சநீதி மன்ற தீர்ப்பை அனைத்து தரப்பினரும் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு என்று கொண்டாடி வருகிறார்கள்… ஆனால், இந்த தீர்ப்பால் கிடைக்கப்போகும் லாபம் என்ன…. ஜனநாயகத்தின் மீதும், அரசியல் சாசனத்தின்மீது விழுந்த கறை அகற்றப்பட்டதா…. என்பது கேள்விக்குறியே…

தீர்ப்பில், எடியூரப்பா இன்று மாலை 4 மணிக்கு சட்டமனற்த்தில்  வாக்கெடுப்பு கோரவேண்டும் என்று உத்தரவிட்டனர். அதற்கு ஏதுவாக
தற்காலிக சபாநாயகர் நியமனம் செய்யப்பட வேண்டும் என்றும், எம்எல்ஏக்களுக்கு  மாநில டி.ஜி.பி. உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தனர்….

நீதிபதிகளின் கடமை அத்தோடு முடிந்தது. ஆனால்… நடைபெறப்போவது என்ன….?

ஏற்கனவே பாஜவின் குதிரைபேரத்துக்கு காங்கிரசை சேர்ந்த 3 எம்எல்ஏக் களும், ஜேடிஎஸ் கட்சியை சேர்ந்த 2 எம்எல்ஏக்களும் மறைமுகமாக ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், சுயேச்சைகள் 2 பேரும் ஆதரவான மன நிலையிலேயே இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக எடியூரப்பாவுக்கு சாதகமாக 111 வாக்குகள் கிடைப்பது உறுதியாக உள்ள நிலையில் அவர் வெற்றிபெறும் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவே நம்பப்படுகிறது.

இந்த பரபரப்பான சூழலில்தான்   இன்று காலை 11 மணிக்கு கர்நாடக சட்டமன்றம்  கூடுகிறது. முதலில் புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட உறுப்பினர்கள் எம்.எல்.ஏ.க்களாக பதவி ஏற்றுக்கொள்வார்கள். அவர்களுக்கு தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள பாரதீய ஜனதாக கட்சியைச் சேர்ந்த போப்பையா பதவி பிரமாணம் செய்து வைக்க இருக்கிறார்.

சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்றதும், மாலை 4 மணிக்கு நம்பிக்கை கோரி முதல்வர் எடியூரப்பா தீர்மானம் தாக்கல் செய்தார். அதுகுறித்து விவாதம் நடைபெற்றும். இறுதியில் வாக்கெடுப்பு நடைபெறும்.

வாக்கெடுப்பை   ரகசியமாக நடத்தக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருப்பதால், வெளிப்படையாக நடைபெறும் சூழல் ஏற்பட்டுள்ளது.

எடியூரப்பாவை  ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்கள் தங்கள் கைகளை உயர்த்தியோ அல்லது எழுந்து நின்றோ ஆதரவு தெரிவிப்பார்கள்.

எடியூரப்பா அரசு பிழைக் குமா? அல்லது அற்ப ஆயுளில் கவிழுமா? என்பது இந்த பலப்பரீட்சையின்போது தெரிந்துவிடும்.

தற்போதைய சூழ்நிலையில் எடியூரப்பாவின் தலைக்கு மேலே கத்தி தொடங்கிக்கொண்டிருக்கிறது. இந்த கத்தி அவரது தலையை வெட்டுமா அல்லது, பூமாலையாக மாறி அவரது கழுத்தை அலங்கரிக்குமா என்பது இன்று மாலை தெரிந்து விடும்.