மதுரை:
உயிர்க்கொல்லி நோய்களை உருவாக்கி வரும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிரா ஆலைக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மதுரை உயர்நீதி மன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
மேலும், ஆலையைச் சுற்றி 1 கி.மீ., தொலைவிற்கு 144 தடை உத்தரவு பிறப்பிப்பது தொடர்பாக 21ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர் உரிய முடிவெடுக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடியில் இந்த மாதம் 22ந்தேதி, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது.
இது தொடர்பாக, ஆலைக்கு பாதுகாப்பு கோரி, ஆலை நிர்வாகத்தின் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த நீதிபதி ரமேஷ், ஸ்டெர்லைட் ஆலை பாதுகாப்புக்கு கூடுதல் போலீசாரை பணியமர்த்த வேண்டும் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டார்.
மேலும் ஆலையை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிப்பது தொடர்பாக வரும் 21ஆம் தேதிக்குள் உரிய முடிவெடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தார்.