கர்நாடக தேர்தலில் நிச்சயம் வெல்வோம் என்றே காங்கிரஸ் நம்பியது. சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு மீது புகார்கள் ஏதுமில்லை என்பதால் மக்கள் ஆதரவு கிடைக்கும் என்று நம்பினார்கள். ஆனால் அந்த நம்பிக்கைக்கு மாறாக, சீட்டுகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது காங்கிரசுக்கு. (ஆனால் மொத்த ஓட்டுக்களில் பாஜகவைவிட காங்கிரஸ் அதிகம் பெற்றிருக்கிறது.)

காங்கிரஸுக்கு ஏன் இந்த நிலை?

எல்லோரும் சுட்டிக்காட்டுவது ரெட்டி சகோதரர்களைத்தான்.

கர்நாடகாவில் ஆந்திரப் பகுதியை ஒட்டியுள்ள பல்லாரி பகுதியில், பி.ஜே.பி-யின் செல்வாக்கான முகமாக இருந்தது ஜனார்த்தன ரெட்டி குடும்பம். இவர்கள்  மீது எழுந்த ஊழல் புகாரால்  கட்சியிலிருந்து அவர்களை ஓரம்கட்டியது பாஜக.

அதன் தொடர்ச்சியாகவே கடந்த முறை பாஜக கர்நாடகத்தில் படுதோல்வி அடைந்தது.

கர்நாடகாவில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்றால், ரெட்டியின் ஆதரவு தங்களுக்குத் தேவை என்பதை பாஜகவின் அகில இந்திய தலைவர் அமித் ஷா உணர்ந்தார்.

ஆகவே கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பே  அமித் ஷா, ரெட்டி சகோதரர்களை சந்தித்துப் பேசி “பாஜக  வெற்றிக்கு உதவ வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து  ரெட்டி பண நோட்டுக்களை வீசி எறிய ஆரம்பித்தார்.

கர்நாடக தேர்தலில், இதுவரை இல்லாத அளவுக்குப் பணப்புழக்கம் பெருகியிருந்ததை அனைவரும் அறிந்தார்கள்.

இதன் பின்னணியில் ரெட்டி சகோதரர்கள் இருப்பதாக புகார் எழுந்தது. ஆனால், ரெட்டி சகோதரர்கள் இது குறித்து கவலைப்படவில்லை. குறிப்பிட்ட தொகுதிகளை குறிவைத்து  பணத்தை வாறி இறைத்தார்கள்.

ஜனார்த்தன ரெட்டி, தனது தம்பி உட்பட ஆதரவாளர்கள் எட்டுப் பேருக்கு பி.ஜே.பி-யில் சீட் வாங்கிக் கொடுத்தார். எடியூரப்பாவினால் தனது மகனுக்குக்கூட சீட் வாங்க முடியாதநிலையில் ரெட்டி கைகாட்டியவர்களுக்கு எல்லாம் சீட்டுகளை வாரி வழங்கியது பாஜக தலைமை.

உதாரணமாக..  தனது தொழில் முறை நண்பரான ஸ்ரீராமுலுவை சித்தராமையாவுக்கு எதிராக பதாமி தொகுதியில் நிறுத்தினார் ரெட்டி.

பெல்லாரி பகுதிக்குள் நுழைவதற்கே உச்சநீதிமன்றத்தினால் தடைவிதிக்கப்பட்டிருக்கிறது ஜனார்த்தன ரெட்டிக்கு. ஆனால், பெல்லாரிக்கு அருகில் மொலக்கல்முருவில் உள்ள தனது பண்ணை வீட்டிலிருந்து பாஜகவின் தேர்தல் வியூகத்தை தீர்மானித்துக்கொண்டிருந்தார் ரெட்டி.

16,000 கோடி சுரங்க ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியிருக்கும் ரெட்டியை  பாஜக பயன்படுத்திவருகிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் உட்பட பலரும் குற்றம் சாட்டினர். ஆனால் இக்குற்றச்சாட்டை பாஜக கண்டுகொள்ளவே இல்லை.

பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா “ரெட்டியின் சேவை எங்களுக்குத் தேவை. அவர் பிரசாரம் செய்வதில் எந்தத் தவறும் கிடையாது’ என்று  வெளிப்படையாகவே பேசினார்.

பெல்லாரி பகுதியில் உள்ள எட்டுத் தொகுதிகளில் கடந்த முறை காங்கிரஸ் கட்சி செல்வாக்குடன் இருந்தது. ஆனால்  இந்த முறை பெல்லாரி பகுதியில் காங்கிரஸ் பின்னடைவை சந்தித்துள்ளது. காரணம் ரெட்டியின் பணம்தான்.

பாஜக வேட்பாளர் பட்டியலை அறிவிப்பதற்கு முன்பே  ஜனார்த்தன ரெட்டி, `45 தொகுதிகளுக்கான பொறுப்பை பாஜக என்னிடம் அளித்துள்ளது’ என்று வெளிப்படையாக பேசினார்.

“ கடந்த ஐந்து வருடங்களாக வழக்குகளை சமாளிக்க வேண்டிய நிலை.. இன்னொருபுறம் சுரங்கத் தொழிலை நடத்த முடியாத நிலை என்று ரெட்டி சகோதரர்கள் தவித்து வந்தனர்.   பாஜகவுக்கு ஆதரவாக தற்போது இறங்கியுள்ளதால், வழக்கையும் நீர்த்துப் போகச் செய்யப்போவதோடு  தொழிலையும் மீண்டும் துவங்க  திட்டமிட்டுள்ளார். மேலும் பாஜகவுக்கு தேர்தல் நிதியாக ரெட்டி தரப்பிலிருந்து பெரும்  பொருளுதவி அளிக்கப்பட்டுள்ளது” என்கிறார்கள்.

 

 

 

[youtube-feed feed=1]