டில்லி
கணவரை விவாகரத்து செய்த பிறகும் அவர் மீது குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் பெண்கள் புகார் அளிக்கலாம் என உச்சநீதிமன்றம் கூறி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஒரு கணவனும் மனைவியும் கருத்து வேற்றுமை ஏற்பட்டு விவாகரத்து செய்துக் கொண்டனர். அந்த மனைவி விவாகரத்துக்குப் பின்பும் தனது முன்னாள் கணவர் தொந்தரவு தருவதாக கூறி புகார் அளித்தார். குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட இந்த புகாரை விசாரித்த ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் கடந்த 2013ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பில், “குடும்ப வன்முறை சட்டட்தின் கீழ் ஒரு பெண் புகார் அளிப்பதற்கு அவர் திருமண உறவில் இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. விவாகரத்து ஆன பின்பும் முன்னாள் மனைவி பணி புரியும் இடத்துக்கு வருவதும், அவரிடம் பேசுவதோ அல்லது வேறு முறையில் தொடர்பு கொள்ள முயலுவதோ குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் குற்றமாகும். அத்துடன் இருவர் பெயரிலும் பொதுவான சொத்துக்கள் இருப்பின் நீதிமன்றம் மூலமே தீர்வு காண வேண்டும்” என கூறப்பட்டிருந்தது.
இதை எதிர்த்து அந்த கணவர் அளித்த மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், பானுமதி, நவீன் சின்ஹா ஆகியோரின் அமர்வில் விசாரிக்கப்பட்டது. இந்த அமர்வில் ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தீர்ப்பை மாற்றி அமைக்கத் தேவை இல்லை என முடிவு செய்யப்பட்டு தீர்ப்பு அளிக்கப்பட்டது. எனவே குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் பெண்கள் விவாகரத்துக்குப் பிறகும் புகார் அளிக்கலாம் என்பதை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.