டில்லி

நீதிபதி ஜோசப் விவகாரம் பற்றி விவாதிக்க இன்று கொலிஜியம் குழு கூட உள்ளது

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான கொலிஜியம் குழு உத்தரகாண்ட் நீதிபதி ஜோசப்பை உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி அளிக்க மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது.   ஆனால் மத்திய அரசு ஜோசப்புக்கு பதவி அளிக்க மறுத்து விட்டது.   ஏற்கனவே கேரளாவை சேர்ந்த நீதிபதிகள் உச்சநீதிமன்றத்தில் உள்ளதாக அரசு காரணம் தெரிவித்தது.

ஆனால் கொலிஜியம் குழு உள்ளிட்ட பலரும் இந்த காரணத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.    உத்தரகாண்டில் முன்பு மத்திய அரசு அமுல்படுத்திய ஜனாதிபதி ஆட்சியை நீதிபதி ஜோசப் ரத்து செய்து தீர்ப்பளித்ததால் அவருக்கு மத்திய அரசு பதவி உயர்வு அளிக்கவில்லை என்னும் குற்றச்சாட்டு பரவலாக எழுந்தது.

இன்று கொலிஜியம் குழு கூடி இது குறித்து விவாதிக்க  உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.   குழுவில் உள்ள உச்சநீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வர் வரும் ஜுன் 22ஆம் தேதி முதல் ஓய்வு பெற உள்ளார்.  அதனால் அதற்கு முன்பு அவர் விருப்பப்படி கொலிஜியம் குழுக் கூட்டம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.   இன்று பிற்பகல் 1 மணி அளவில் இந்தக் குழு கூடி ஜோசப் விவகாரம் குறித்து விவாதிக்கும் என சொல்லப்படுகிறது.