ஐதராபாத்:
தெலங்கானா மாநிலத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கிளாக்டவர் சென்டர் அருகே சென்ற ஒரு சரக்கு வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அதில், கட்டுகட்டகாக புத்தம் புதிய ரூபாய் நோட்டுக்கள் அடுக்கியிருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் இது குறித்து போலீசார் வாகனத்தில் வந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவை நலகோண்டா மாவட்டத்தில் உள்ள ஒரு வங்கியில் இருந்து இந்த பணம் கொண்டு வந்தது தெரியவந்தது. மாவட்டத்தில் உள்ள அவ்வங்கியின் இதர கிளைகளுக்கு வழங்குவதற்காக கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த வாகனத்தை வங்கி நிர்வாகத்தினர் வாடகைக்கு அமர்த்தியுள்ளனர்.
ஆனால், பணம் கொண்டு செல்லும் போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் பணத்தை கொண்டு சென்றது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வாகனத்தில் மொத்தம் ரூ.40 கோடி இருந்தது தெரியவந்துள்ளது.