சென்னை:

த்திய அரசை விமர்சித்து வருவதுபோல பாசாங்கு செய்து  அதிமுக அரசு இரட்டை வேடம் போடுகிறது என்று டிடிவி தினகரன் குற்றம் சாட்டி உள்ளார்.

சென்னை விமான நிலையத்தில்  அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப்பொதுச்செயலாளரும், ஆர்.கே நகர் சட்டமன்ற உறுப்பினருமான டி.டி.வி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

காவிரி விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி அரசு இரட்டை வேடம் போட்டு வருகிறது.. விரைவில் இந்த ஆட்சிக்கு முடிவு கட்டவே மக்கள் விரும்புகிறார்கள் என்றார்.  உச்சநீதிமன்றத்தில் காவிரி விவகாரம் தொடர்பான விசாரணையின்போது, மத்திய அரசுக்கு எதிர்ப்புத் தெரிவிக்காமலும், அதே நேரம் நாளிதழ்களில் காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராகவும் பேசும்  தமிழக அரசின் போக்கு மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆட்சிக்கு விரைவில்  முடிவுகட்ட வேண்டும் என்று மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார்கள். அது நிச்சயம் நடக்கும் என்றார்.

மேலும், செய்தியாளர்களின் ஓபிஎஸ் தகுதி நீக்கம் வழக்கு குறித்த கேள்விக்கு பதில் அளித்த டிடிவி, இந்த  11 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கில் திமுகவுடன்  நாங்களும் மேல்முறையீடு செய்வோம் என்று கூறினார்.

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் அதிமுக போட்டியிடுவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, . கர்நாடகா தொடர்ந்து காவிரி நீர் கொடுக்க மறுத்து வரும் சூழலில், அங்கு நடக்கும் தேர்தலில் அதிமுக போட்டியிடுவது என்ன மாதிரியான மனநிலை என்று தெரியவில்லை என்றார்.

மற்றும், தமிழக அரசியலில் உள்ள வெற்றிடத்தை நிரப்ப ரஜினிகாந்த் மட்டுமே தகுதியானவர் என்ற குருமூர்த்தியின் பேச்சு, அவரது சொந்த கருத்து.

இவ்வாறு டிடிவி தினகரன் கூறினார்.