பெங்களூரு:
கர்நாடக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளை மறுதினம் (12ந்தேதி) நடைபெற உள்ளதால், இன்றுடன் அங்கு அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் முடிவுக்கு வருகிறது.
இந்நிலையில், கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்கும் நோக்கில், மாநிலம் முழுவதும் பாரதியஜனதா தலைவர்கள் ஏராளமானோர் முற்றுகையிட்டு இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கர்நாடக சட்டமன்ற தேர்தல் குறித்து, ஏற்கனவே நடத்தப்பட்டுள்ள கருத்துக்கணிப்பின்படி, அங்கு தொங்கு சட்டசபை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுளளது. மேலும், கர்நாடக சட்டமன்ற தேர்தல்தலை அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக காங்கிரஸ் மற்றும் பாரதியஜனதா கட்சிகள் கருதுவதால், கர்நாடகாவில் வெற்றியை நிலைநாட்ட கடுமைய தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏற்கனவே கடந்த 2 மாதங்களுக்கு முன்பே தேர்தல் பிரசாரம் தொடங்கி உள்ள நிலையில், பாஜகவுக்கு ஆதரவாக பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா உள்பட மத்திய அமைச்சர்கள், பாஜக முன்னணி நிர்வாகிகள் கர்நாடகாவில் டேரா போட்டு வாக்கு சேகரித்து வருகின்றனர்.
காங்கிரசுக்கு ஆதரவாக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சூறாவளி பயணம் மேற்கொண்டு பட்டி தொட்டிகளில் எல்லாம் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்த சூழலில் இன்று தேர்தல் பிரசாரத்துக்கு கடைசிநாள் என்பதால் அரசியல் கட்சிகள் மக்களை நோக்கி படையெடுத்து வருகின்றன.
பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு மத்திய அமைச்சர்கள் பட்டாளமே களமிறங்கி உள்ளது. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்ச்ர நிர்மலா சீதாராமன், பிரகாஷ் ஜவடேகர், ஆனந்த் குமார், சதானந்த கவுடா, அனுராக் தாகூர், கிருஷ்ணபால் குஜ்ஜார், மீனாட்சி லேகி, பியூஷ் கோயல்.
மற்றும் மாநில முதல்வர்களான சத்தீஸ்கர் முதல்வர் ராமன்சிங், மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் கவுகார் உள்பட பாரதியஜனதா முக்கிய நிர்வாகிகள் உள்பட 23 தலைவர்கள் திறந்த வாகனங்களில் சென்று இன்று இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சித்தராமையா போட்டியிடும் பதாமி தொகுதியில், பாஜ தேசிய தலைவர் அமித் ஷா பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
அதுபோல காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம் சார்பில் தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அனைத்து பிரசாரங்களும் இன்று மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. அதைத்தொடர்ந்து வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி நடைபெறும்.
அதைத்தொடர்ந்து நாளை மறுநாள் (12ந்தேதி) வாக்குப்பதிவு நடைபெறுகிறது.