டில்லி:
பிரதமர் மோடியின் வெளிநாட்டு சுற்றுப்பயணத்திற்கான விமான கட்டண விவரத்தை தெரிவிக்கும்படி ஏர் இந்தியா நிறுவனத்துக்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.
கடந்த 2016-17ம் ஆண்டில் மோடியின் வெளிநாட்டு பயணத்திற்கான விமான கட்டண விவரங்களை 7 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நேற்று அதிரடியாக கூறி உள்ளது.
ஏற்கனவே பிரதமர் மோடியின் 2013 முதல் 2017-ம் ஆண்டு வரையிலான ஏர் இந்தியா விமானங்கள் மூலம் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்கள் பற்றிய செலவு விவரங்களை அளிக்குமாறு வெளியுறவு அமைச்சகத்திடம் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி லோகேஷ் பத்ரா தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கோரியிருந்தார்.
ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் மோடியின் விமான பயண செலவு குறிதது தகவல்களை தெரிவிக்க வெளியுறவு அமைச்சகம் மறுத்துவிட்டது.
இதையடுத்து, மத்திய தலைமை தகவல் ஆணையர் ஆர்.கே.மாத்தூரிடம் லோகேஷ் பத்ரா மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.
அவர் தாக்கல் செய்த மனுவில், ஏர் இந்தியா நிறுவனம் ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கும் நிலையில், பிரதமரின் வெளிநாட்டு பயண செலவுகள், பயணத்துக்காக அரசு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை ஆகியவற்றை தெரிவிக்க வேண்டும் என்றும் நிலுவைத் தொகையை அரசு செலுத்தினால் ஏர் இந்தியா நிறுவனம் ஓரளவு சிறப்பாக செயல்படும் என்று கூறப்பட்டிருந்தது.
மனுவை விசாரித்த தலைமை தகவல் ஆணையர் ஆர்.கே.மாத்தூர், வெளியுறவு அமைச்சகத்தின் விளக்கத்தை ஏற்க மறுத்து மீண்டும் தகவல்களை தெரிவிக்க உத்தரவிட்டார்.
2013 முதல் 2017 வரை ஏர் இந்தியா, மற்றும் விமானப் படை விமானங்கள் மூலம் பிரதமர் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்களுக்கான செலவு, நிலுவை விவரத்தை மனுதாரருக்கு அளிக்க உத்தரவிட்டார்.
ஆனால், வாடிக்கையாளருடன் வணிக ரீதியான நம்பிக்கை மற்றும் நேர்மையற்ற உறவுகளின் கீழ், பாத்ரா கோரிய விவரங்கள் தர விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக ஏர் இந்தியாவின் பொது தகவல் அலுவலர் தெரிவித்து உள்ளார்.