லக்னோ:
உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் இளம்பெண் பாலியல் பலாத்கார வழக்கில் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த பரபரப்பு அடங்குவதற்கு தற்போது ஒரு பெண் வக்கீல் பாஜக தலைவர் சதீஷ் சர்மா மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.
சதீஷ் சர்மா ஆபாச வீடியோ ஒன்றை பதிவு செய்து வைத்துக் கொண்டு என்னை மிரட்டி வருகிறார். கடந்த 3 ஆண்டுகளாக தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருவதாக அவர் குற்றம்சாட்டினார்.
இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் பேட்டி அளித்த போது தனது கூந்தலை அவரே டிரிம்மர் கருவி மூலம் அகற்றி எதிர்ப்பை தெரிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில்,‘‘ சதீஷ் சர்மா ஏற்கனவே எனது பாதி முடியை வெட்டிவிட்டார். அவர் பாஜக.வில் பெரிய தலைவர். அவருக்கு அரசியல் ரீதியாக பாதுகாப்பு உள்ளது. அவர் எனது குடும்பத்தையும் மிரட்டினார். நான் தலித் என்பதால் நான் இத்தகைய செயல்பாடுகளை எதிர்கொண்டு வருகிறேன்’’ என்றார்.
இது குறித்து போலீசாரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வதை தவிர வேறு வழியில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.