கொச்சி
நகரில் உள்ள பெரிய மருத்துவமனைகள் கிராமப்புறங்களில் உள்ள சிறு மருத்துவ மனைகளுடன் இணைந்து செயல்பட உள்ளன.
நகர்ப்புறங்களில் உள்ள புகழ்பெற்ற பெரிய மருத்துவமனைகளில் சிகிச்சை பெற விரும்புவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதே போல ஒரு சில குறிப்பிட்ட சிகிச்சைகளை ஒரு சில மருத்துவமனைகளே திறம்பட நடத்துகின்றன. இந்நிலையில் நகர்ப்புறங்களில் வசிக்காதவர்களுக்கு இத்தகைய மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடிவதில்லை.
இது குறித்து கேரள மாநில மருத்துவ கல்வி நிறுவன தலைவர் சாகதுல்லா, “சிறிய நக்ரங்களில் உள்ள மக்களுக்கும் தற்போது மருத்துவ சேவைகளை அளிக்க வேண்டி உள்ளது. இதற்காக புதிய மருத்துவமனைகளை தொடங்குவது என்பது மிகவும் கடினமானதாகும். ஏற்கனவே உள்ள மருத்துவமனைகளை விலைக்கு வாங்குவதும் மிகவும் செலவை உண்டாக்கும். அத்துடன் தற்போது அனைத்து மருத்துவ வசதிகளும் குறைந்த செலவில் அளிக்க வேண்டியது இன்றியமையாததாகி விட்டது.
எனவே நகரில் உள்ள பெரிய மருத்துவமனைகள் சிறிய நகரங்களில் மற்றும் கிராமப்புரங்களில் உள்ள சிறு மருத்துவமனைகளுடன் இணைந்து செயல் பட தீர்மானித்துள்ளன. இதன்படி குறைந்தது 25 படுக்கை வசதி கொண்ட மருத்துவ மனைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்த மருத்துவமனைகளுக்கு நகரில் உள்ள மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர்கள் வந்து நோயாளிகளை கவனித்து சிகிச்சை அளிக்க உள்ளனர்.
இதில் தனியார் மருத்தவ மனைகள் மட்டும் இன்றி எய்ம்ஸ் போன்ற அரசு மருத்துவமனைகளும் இணைய உள்ளன. பல சிறிய மருத்துவமனைகளில் தேவையான அளவு வசதிகள் உள்ள போதிலும் நோயாளிகள் வரத் தயங்குவதால் அந்த மருத்துவமனைகள் மூடும் அபாயம் உள்ளது. இது போன்ற நடவடிக்கைகளால் அந்த மருத்துவமனைகளுக்கு நோயாளிகள் வருவது அதிகரிக்கும்” எனக் கூறி உள்ளார்.