டில்லி

லைமை நீதிபதியை பதவி விலக்கக் கோரிய மனுவை நிராகரித்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் முடிவை எதிர்த்து இரு காங்கிரஸ் எம் பிக்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது குற்றச்சாட்டுக்கள் கூறி நாட்டில் முதல் முறையாக உச்சநீதிமன்றத்தின் 4 மூத்த நீதிபதிகள் பத்திரிகையாளர்கள் சந்திப்பை நிகழ்த்தினர்.   அதன் பிறகு மத்திய அரசின்  தலையீட்டால் அந்த விவகாரம் அடங்கியது.    காங்கிரஸ் தலைமையில் சில எதிர்க்கட்சிகள் தீபக் மிஸ்ரா மீது 5 குற்றசாட்டுக்கள் அடங்கிய புகார்கள் கூறி அவரை பதவி நீக்கம் செய்யுமாறு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவிடம் மனு ஒன்றை அளித்தனர்.

அதற்கு பதவி நீக்கம் செய்யும் அளவுக்கு வலுவான புகார்கள் எதுவும் இல்லை எனக் கூறி அந்த மனுவை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நிராகரித்து விட்டார்.  இது எதிர்க்கட்சிகள் இடையே கடும் பரபரப்பை உண்டாக்கியது .   பல சமூக ஆர்வலர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

அவருடைய இந்த முடிவை எதிர்த்து மாநிலங்கள் அவை உறுப்பினர்களான பிரதாப் சிங் பாஜ்வா மற்றும் அமீ ஹர்ஷட்ரய் யக்னிக் ஆகிய இருவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு மனு அளித்துள்ளனர்.

அந்த மனுவில், “தலைமை நீதிபதியை பதவி விலக்கக் கோரி அளிக்கப்பட்ட மனுவில் 50 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெசுத்திட்டுள்ளனர்.   அதனால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டிய மனுவை துணை ஜனாதிபதி நிராகரித்துள்ளார்.   இது மிகவும் தவறானதாகும்.   அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளது தவறான குற்றசாட்டு எனக் கருதினால் ஒரு விசாரணை ஆணையம் அமைத்து அந்த குற்றச்சாட்டுக்களை ஆராய வேண்டும்.

அத்துடன் இந்த மனு ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதி அளிக்கப்பட்டு ஏப்ரல் 23 ஆம் தேதி வெங்கையா நாயுடுவால் நிராகரிக்கப்பட்டுள்ளது.   இடைப்பட்ட நாட்களில் அவர் டில்லியில் இல்லை.  அப்படி இருக்க இந்த புகாரைப் பற்றி அவரால் எப்படி விசாரித்திருக்க முடியும்?   எனவே இந்த புகார் மனு குறித்து உடனடியாக விசாரணை ஆணயம் ஒன்று அமைக்கப்பட வேண்டும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.