சென்னை

14 வருடங்களுக்கு முன்பு கும்பகோணம் பள்ளி தீவிபத்தில் இறந்த குழந்தைகளின் இழப்பீட்டுத் தொகையை மோசடி செய்த வழக்கறிஞரை சிபிசிஐடி தேடி வருகிறது

சுமார் 14 வருடங்களுக்கு முன்பு கும்பகோணம் பள்ளியில் ஏற்பட்ட கோர தீவிபத்தினால் 94 குழந்தைகள் மரணம் அடைந்தனர்.  100 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.   இந்த வழக்கில் மரணம் அடைந்த குழந்தைகளின் பெற்றோர்கள் பல விதத்திலும் துன்புற்றது தெரிந்ததே.  தற்போது அந்தக் குழந்தைகளின் பெற்றோர்கள் சார்பில் வாதிட்ட வழக்கறிஞராலும் அவர்கள் துன்புற்றது வெளியே தெரிய வந்துள்ளது.

இந்த தீவிபத்தில் பெற்றோர்கள் சார்பாக தமிழரசன் என்பவர் வாதாடி வந்தார்.    இந்த தீவிபத்தில் உயிரிழந்த மாணவர் மோகன் குமாரின் தந்தை மாரிமுத்து.  இவருக்கு அரசு ரூ. 8.01 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்கியது.   இதில் ரூ. 2.3 லட்சம் தொகையை மாரிமுத்துவுக்கு  அளித்த வழக்கறிஞர் மீதமுள்ள தொகையை தனது உறவினர்களின் வங்கிக் கணக்குக்கு மாற்றி விட்டதாக எழுந்த புகாரை ஓட்டி விசாரணை நடத்த சிபிசிஐடி காவல்துறையினருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை ஒட்டி சிபிசிஐடி சென்னை தாம்பரத்தில் உள்ள வழக்கறிஞரின் வீட்டுக்கு சோதனை இட சென்றபோது வீட்டிலிருந்த அனைவரும் தலைமறைவாகி விட்டனர்.    அடுத்த வீட்டுக்கார்களிடம் அவர் வீட்டு சாவி இருந்தது.  அதைக் கைப்பற்றி சோதனை இட்ட சிபிசிஐடி காவல்துறையினர்  வழக்கறிஞர் வீட்டில் மரணம் அடைந்த குழந்தைகளின் பெற்றோர்கள் சிலர் கையெழுத்திட்ட காசோலைகளை கண்டு எடுத்துள்ளனர்.

தமிழரசனை தமிழ்நாடு பார் கவுன்சிலில் இருந்து இடை நீக்கம் செய்யுமாறு உயர்நீதிமன்றத்துக்கு சிபிசிஐடி மனு அளித்துள்ளது.   அனைத்து காவல்துறையினரும் தலைமறைவாக உள்ள தமிழரசன் மற்றும் அவர் குடும்பத்தினரை தேடி வருகின்றனர்.