தமிழக மாணவர்களை வெளி மாநிலங்களுக்கு தேர்வு எழுத செய்த சிபிஎஸ்இ கல்வி வாரியம், தமிழகத்திலேயே தமிழக மாணவர்களுக்கு சரியான வினாத்தாட்களை கொடுக்காமல் இந்தி போன்ற தெரியாத மொழி தேர்வு வினாத்தாள்களை கொடுத்து, மாணவ மாணவிகளை பெரும் மன அழுத்தத்துக்கு உள்ளாக்கி உள்ளது.
இது சிபிஎஸ்இ கல்வி வாரியத்தின் திட்டமிட்ட சதி என்று கூறப்படுகிறது. தமிழக மாணவர்களை வேண்டு மென்றே மனஅழுத்ததுக்கு ஆளாக்கி, தேர்வில் வெற்றிபெற இயலாத நிலையை ஏற்படுத்தவே சிபிஎஸ்இ இதுபோன்ற ஈனத்தனமான செயல்களை செய்துள்ளது என்று மாணவர்கள், பெற்றோர்கள், சமுக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.
தமிழக மாணவர்களை தேர்வு எழுத வெளி மாநிலங்களுக்கு விரட்டியடித்து, அவர்களுக்கு மன உளைச்சலையும், அவர்களின் பெற்றோர்களுக்கு தேவையற்ற செலவையும் ஏற்படுத்திய சிபிஎஸ்இ தமிழகத்திலாவது தேர்வை சரியாக நடத்தியதா என்றால்… இல்லை…. பல இடங்களில் வினாத்தாள் வழங்கியதில் குளறுபடி செய்து மாணவர்களை மேலும் கஷ்டப்படுத்தி உள்ளது.
தேர்வு எழுத செல்லும் மாணவர்களிடம் சோதனை என்ற பெயரில் அநாகரிமாக பல இடங்களில் ஆசிரியர், ஆசிரியைகள் நடந்துகொண்டு உள்ளனர். இதன் காரணமாக பல இடங்களில் மாணவிகள் கண்ணீரோடு தேர்வு எழுத சென்றதை அனைவரும் பார்த்திருப்போம்.. இதுவும் ஒருவகையில் மாணவர்களிடையே மன அழுத்தத்தை ஏற்படுத்தியது.
மேலும் தேர்வு எழுதச்செல்லும் மாணவ மாணவிகளிடம் ஆசிரியர்களை, ஆசிரியைகள் செய்த கெடுபிடிகள் மற்ற மாநிலங்களைவிட தமிழகத்திலேயே அதிக அளவிலும், அநாரிகமாகவும் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்படுகிறது. இதுவும் சிபிஎஸ்இ.ன் திட்டமிட்ட செயலே.
அதுபோல தேர்வுக்கு ஒரு மணி நேரம், 2 மணி நேரம் முன்னதாகவே பள்ளிகளுக்குள் சென்று தேர்வை எதிர்கொள்ள சென்ற மாணவ மாணவிகளுக்கு பல இடங்களில் சரியான கேள்வித்தாள் கொடுக்கப்படாமல் திட்டமிட்டே அவர்களுக்கு மனஅழுத்தத்தை கொடுத்துள்ளது சிபிஎஸ்இ கல்வி வாரியம்.
மதுரை அருகே நரிமேடு தனியார் பள்ளியில் போதிய வினாத்தாள் இல்லாததால் 5 மணி நேரம் தாமதமாக தொடங்கிய நீட் தேர்வு நிறைவு பெற்றுள்ளது.
பொதுவாக, காலை 10 மணிக்கு தொடங்கிய நீட்தேர்வு பிற்பகல் 1 மணியளவில் நிறைவடைய வெண்டும். ஆனால், சேலம், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் தமிழ் வழி மாணவர்களுக்கு ஹிந்தியில் வினாத்தாள் வழங்கப்பட்டதால் ஒரு சில இடங்களில் தேர்வு தாமதமாக தொடங்கியது. இதன் காரணமாக மாணவ மாணவிகள் பெரும் அவதிக்கு உள்ளானர்கள்.
மதுரை நரிமேடு நாய்ஸ் பள்ளியில் 720 மாணவர்கள் நீட் தேர்வு எழுதும் வகையில் மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதில் 120 தமிழ் வழிக் கல்வி மாணவர்களுக்கு ஆங்கிலம் கேள்வித்தாளுக்கு பதிலாக இந்தியில் அச்சடிக்கப்பட்ட வினாத்தாள்களை வழங்கி, மாணவர்களை தேர்வு எழுதச் சொல்லி நோகடித்துள்ளனர் தேர்வுத்துறையினர்.
இதுகுறித்து, மாணவர்கள் தேர்வுக்கூட மேற்பார்வையாளர்களிடம் சொன்னபிறகே, அவர்களும், இந்த விஷயம் வெளியே தெரியாதவாறு உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, பின்னர் வேறு வினாத்தாள் வரவழைத்து தேர்வு நடத்தி உள்ளனர். அதுவரை மாணவ மாணவிகள் செய்வதறியாமல் தேர்வு அறையில் கவலையுடன் அமர்ந்திருக்கிறார்கள்.
இதன் காரணமாக 5 மணி நேரம் தாமதமாக பிற்பகல் 3 மணிக்கு ஆங்கில கேள்வித்தாள்களை வழங்கி 6 மணிக்கு முடித்துள்ளனர். சுமார் 6மணி நேரத்திற்கும் மேலாக தமிழக மாணவர்களை வேண்டுமென்றே மன அழுத்ததை ஏற்படுத்த வைத்த சிபிஎஸ்இ கல்வி வாரியத்தின் செயல்…. மன்னிக்க முடியாததாகும்.
இதே போன்று சேலம் மெய்யனூர் வித்யாமந்திர் பள்ளியில் தமிழ் வாயிலாக தேர்வெழுதும் மாணவர்களுக்கு ஹிந்தியில் வினாத்தாள் வழங்கப்பட்டதால் தாமதமாக தேர்வு நடைபெற்றது. இங்கு தேர்வுக்கு சென்ற 780 பேரில் 190 தமிழ் மீடியம் மாணவர்களுக்கு அந்தி வினாத்தாள் வழங்கப்பட்டது. இதுகுறித்து மாணவர்கள் புகார் கொடுத்ததை தொடர்ந்து, மாற்று வினாத்தாள் வரவழைக்கப்பட்டு 12.30 மணிக்கு தேர்வு தொடங்கி நடைபெற்றது.
சிபிஎஸ்இ, தமிழக மாணவர்களுக்கு வேறு மாநிலத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டதுக்கு எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதி மன்றம் வரை சென்று உத்தரவை பெற்றது.
ஆனால், தமிழக மாணவர்களுக்கு அதுவும் தமிழகத்திலேயே இந்தியில் வினாத்தாள் கொடுத்தும், சரியான முறையில் வினாத்தாள்கள் வழங்காமலும், மாணவர்களிடம் சோதனை என்ற பெயரில் அநாகரிகமாக நடந்தும் கடும் மன உளைச்சலை ஏற்படுத்தி, தேர்வை சரிவர எதிர்கொள்ள முடியாத மனநிலையை திட்டமிட்டே உருவாக்கி உள்ளது என்றும் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
இன்றைய வெளிமாநில தேர்வுக்கு சென்ற 2 மாணவர்களின் தந்தை மனஅழுத்தம் ஏற்பட்டு, அதன் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு தங்களது உயிரை இழந்துள்ளனர். இதற்கு யார் பொறுப்பு… அவர்கள் குடும்பத்தின் எதிர் காலத்திற்கு யார் பொறுப்பு….
இதுபோன்று தமிழக மாணவ மாணவிகளுக்கு எதிரான செயலிலில் திட்டமிட்டே சிபிஎஸ்இ கல்வி வாரியம் செயல்பட்டுள்ளது.
இதை கண்டிக்கவோ, தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு எழுதும் வசதி செய்யாத தமிழக கல்வி வாரியமோ, கல்வி அமைச்சரோ, தமிழக அரசோ தமிழகத்தில் செயல்படுகிறதா என்ற கேள்விக்குறி தமிழக மாணவ மாணவிகளும் எழுந்துள்ளது.
அதேவேளையில், தமிழக மாணவர்களை நீட் தேர்வு என்ற பெயரில் திட்டமிட்டு மனஉளைச்சலுக்கு ஆளாக்கிய சிபிஎஸ்இ கல்வி வாரியத்தின் நடவடிக்கையை கண்டிக்கப்போவது யார்?
தமிழக அரசியல் கட்சிகள் என்ன செய்யப்போகின்றன…..? இதுவே தொடர்ந்தால் தமிழக மாணவ மாணவர்கள் மருத்துவம் படிப்பது என்பது காணல்நீர்தான்…..