மும்பை:
மும்பை அலிபக் பகுதியை சேர்ந்தவர் அன்வாய் நாய்க். இன்டீரியிர் டிசைனர். இவர் நேற்று அவரது பங்களாவில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். அவரது தாய் குமுத்தின் உடல் இறந்த நிலையில் நாய்க் பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. குமுத் எப்படி இறந்தார்? என்பது குறித்து அலிபக் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அன்வாய் நாய்க் தற்கொலைக்கான காரணம் குறித்து ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார். இதை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதன் அடிப்படையில் அவரை தற்கொலைக்கு தூண்டியதாக ரிபப்ளிக் டிவி ஆசிரியர் அர்நாப் கோஸ்வாமி, ஐகாஸ்ட் எக்ஸ்/ஸ்கிமீடியாவை சேர்ந்த பெரோஸ் சாய்க், ஸ்மார்ட் ஒர்க்ஸ் நிதேஷ் சார்தா ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அன்வாய் நாய்க்கிற்கு ரிபப்ளிக் டிவி வழங்க வேண்டிய தொகை வழங்காதது தான் தற்கொலைக்கு காரணம் என்று அவரது மனைவி தெரிவித்துள்ளார். ஆனால், இது தவறான குற்றச்சாட்டு என்று ரிபப்ளிக் டிவி விளக்கம் அளித்துள்ளது. தவறான தகவல்களை பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
கான்கோர்ட் டிசைன் நிறுவனத்துடன் 2016ம் ஆண்டு ஏற்படுத்திய ஒப்பந்தத்தின்படி அனைத்து தொகையும் செலுத்தப்பட்டுவிட்டது. இதற்கான ஆவணங்கள் உள்ளது. இதை உரிய அதிகாரிகளிடம் ஒப்படைப்போம் என்று ரிபப்ளிக் டிவி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.