மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த இளம் பெண்ணை, பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு பேரை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஐதராபாத்தில் உள்ள பஞ்சராஹில்ஸ் பகுதியைச் சேர்ந்த வர்  அனுஷா  (பெயர் மாற்றப்பட்டுள்ளது). வயது 35. இவர் கணவர் இவரைக் கடுமையாகத் தாக்கி காயப்படுத்திவிட்டார்.   இதனால் ஐதராபாத்தில் உள்ள பஞ்சரா ஹில்ஸ் காவல் நிலையத்தில்  கணவர் மீது புதன்கிழமை இரவு புகார் கொடுத்தார். போலீசார், அரசு மருத்துவமனையில் இருந்து மருத்துவச் சான்றிதழ் வாங்கி வருமாறு கூறியுள்ளனர்.

இதையடுத்து இரவில் மருத்துவமனைக்குச் சென்ற அனுஷா  , அங்கு விவரத்தைக் கூறினார். மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்தனர். பின்னர் அனுஷா  மருத்துவமனையில் காத்திருந்தார்.  அப்போது அங்கு, முன் பின் தெரியாத ஒருவர் அனுஷாவிடம்  பேச்சுக்கொடுத்திருக்கிறார். சிறிது நேரத்தில் தவறான முறையில் பேசியிருக்கிறார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

அந்த பக்கமாக வந்த வார்டு பாய், நாகராஜ் (35) சத்தம் கேட்டு அனுஷாவிடம் விசாரித்தார். பிறகு , தான் இந்த மருத்துவமனையின் உயரதிகாரி என்றும் வெளிப்புற நோயாளிகளுக்கான வார்டு மேலே இருப்பதாக கூறி தன்னுடன் அழைத்திருக்கிறார். இதையடுத்து அவருடன் சென்றார் அனுஷா.  . முதல் மாடி சென்றதும் அங்கு இருட்டாக இருந்த ஓர் இடத்துக்குள் அழைத்துச் சென்று, மிரட்டி அந்த நபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பிறகு  அங்கே பணியில் இருந்த ஹோம்கார்டுவிடம் நடந்த விஷயத்தைக் கூறியிருக்கிறார் நாகராஜ். அவரும் இதை பொருட்படுத்தாமல்  இருந்திருக்கிறார்.

பாதிக்கப்பட்ட அனுஷா  அப்சல்கஞ்ச் போலீசில் இதுகுறித்து புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் நாகராஜையும்,  குற்றத்தை மறைத்ததற்காக ஹோம்கார்டு, கமர் இலாஹியையும் கைது செய்தனர்.