சண்டிகர்:
கடந்த 2017ம் ஆண்டு அகுடோபர் மாதம் ஆர்எஸ்எஸ் தலைவர் ரவீந்தர் கோசைன் லூதியானாவில் உள்ள தனது வீட்டு வாசலில் சுட்டுக் கொல்லப்பட்டார். இது குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை மேற்கொண்டு வருகிறது.
மொகாலி சிறப்பு நீதிமன்ற நீதிபதி அன்சுல் பெர்ரே முன்னிலையில் ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை என்ஐஏ தாக்கல் செய்துள்ளது. அதில் 2016ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை பஞ்சாப் மாநிலத்தில் நடந்த தொடர் கொலைகளின் ஒரு கட்டமாகவே ரவீந்திர் கோசைன் கொல்லப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 172 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாக இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஜக்தர் சிங் ஜோகர், ஹர்தீப் சிங் ஷீரால ரமன்தீப் சிங் பாகா, பகார் சிங், தர்மீந்தர் சிங் குக்னி, அனில் அகலா உள்பட பலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரான்சில் காலிஸ்தான் விடுதலைப்படை தலைவர் ஹர்மீந்தர் சிங் மிந்தூவை 2013ம் ஆண்டு சந்தித்து பேசிய பின்னரே ரவீந்தர் கோசைனை கொலை செய்ய சதி திட்டம் தீட்டப்பட்டதாக கைது செய்யப்பட்ட ஜக்தர் சிங் ஜோகல் தெரிவித்திருப்பதாக என்ஐஏ தெரிவித்துள்ளது.