டில்லி:

டில்லி ஹூமாயூன்பூர் கிராமத்தில் துக்ளக் ராஜாங்கத்தின் போது அமைக்கப்பட்ட சமாதி ஒன்று இருந்தது. பழங்கால சமாதியான இது 2 மாதங்களுக்கு முன்பு சிவன் கோவிலாக மாற்றப்பட்டுள்ளது. தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள பழமையான நினைவு சின்னம் ஒன்று தனது அடையாளத்தை இழந்து நிற்கிறது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தொல்லியத் துறையில் விதிகளுக்கு புறம்பாக சமாதி முழுவதும் வெள்ளை மற்றும் காவி நிறத்தில் பெயின்ட் அடிக்கப்பட்டுள்ளது. பழமையான நினைவு சின்னங்கள் அதன் தொன்மை மாறாமல் பராமரிக்கப்பட வேண்டும். அதில் ஓவியம் வரைதல், பெயின்ட் அடித்தல், திருத்தங்கள் செய்தல் போன்றவற்றை மேற்கொள்ள தொல்பொருள் ஆராய்ச்சி துறை தடைவிதித்துள்ளது.

ஆனால் இந்த சமாதி முழுவதும் பெயின்ட் அடிக்கப்பட்டதோடு, உள்ளே சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தனக்கு எந்த தகவலும் வரவில்லை என்று டில்லி துணை முதல்வர் மானிஷ் சிசோடியா தெரிவித்தார். எனினும் சம்மந்த்தப்பட்ட தொல்லியல் துறை அதிகாரிகள் விசாரணை நடத்த உத்தரவிடப்படும் என்றார். இது குறித்து கருத்து பெற தொல்லியல் துறை அதிகாரிகளை தொடர்பு கொண்ட போது அவர்கள் கிடைக்கவில்லை.