பெங்களூரு:

கர்நாடகா சட்டமன்ற தேர்தல் வரும் 12ம் தேதி நடக்கிறது. இதற்கான தேர்தல் அறிக்கையை பாஜக வெளியிட்டுள்ளது.

அதில், ஒவ்வொரு விவசாயிக்கும் தலா ரூ. 1 லட்சம் வரை வங்கி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது. இதே காங்கிரஸ் கட்சி கூட்டுறவு வங்கியில் பெற்ற கடனும், மதசார்பற்ற ஜனதா தளம் முழு கடன் தொகையையும் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்துள்ளன.

உத்தரபிரதேசம் மற்றும் பஞ்சாப்பில் கடந்த ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தல்களில் விவசாய கடன் தள்ளுபடி முக்கிய பங்காற்றியது என்பது குறிப்பிடத்தக்கது. பாஜக.வின் தேர்தல் அறிக்கையால் 2 முதல் 3 சதவீத ஓட்டு அதிகரிக்கும் என்று எடியூரப்பா தெரிவித்துள்ளார். நகர்புற ஏழைகளுக்கு மலிவு விலையில் உணவு அளிக்கும் வகையில் உணவகங்கள் திறக்கப்படும் என்று பாஜக அறிவித்துள்ளது.

மாவட்ட தலைநகரங்களில் தலா 3 கேண்டீன்களும், தாலுகா தலைநகரங்களில் தலா ஒன்றும் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஏற்கனவே இதேபோல் இந்திரா கேண்டீன் திட்டம் செயல்பட்டு வருகிறது. மேலும், இலவச ஸ்மார்ட் போன், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு இலவச சானிட்டரி நாப்கின், மாணவ மாணவிகளுக்கு லேப்டாப், பெண்களின் திருமணத்திற்கு 3 கிராம் தங்கம், ரூ. 25 ஆயிரம் ரொக்கம், பசு பாதுகாப்புக்கு ஆணையம், விவசாயிகளுக்கு இலவச சீனா பயணம் ஆகிய வாக்குறுதிகள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.

அடுத்த 5 ஆண்டுகளில் பாசனத்திற்கு ரூ.1.5 லட்சம் கோடி முதலீடு செய்யவும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு 7 நாட்கள் இருக்கும் நிலையில் பாஜக.வின் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா இந்த தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.