டில்லி,
புறநகர் மற்றும் நீண்ட தூரம் செலும் ரெயில்களில் பெண்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு, பெண்களுக்கான தனிப்பெட்டியை ரெயில் பெட்டிகளின் நடுவே இணைக்கவும், பெண்களின் பெட்டிக்கு தனி வண்ணத்தை ஏற்படுத்தவும் இந்திய ரெயில்வே முடிவெடுத்து உள்ளது.
இந்த ஆண்டை பெண்கள் பாதுகாப்பு ஆண்டாக ரெயில்வே கடைபிடித்து வருவதையொட்டி, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது இயக்கப்படும் ரெயில்களின் பெண்களுக்காக தனிப்பெட்டி இருந்தாலும், அதை கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், பெண்கள் பெட்டியை எளிதில் அடையாளம் காண அதற்கு தனி வண்ணம் பூசவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, இளஞ்சிவப்பு நிறம் பூச பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
அத்துடன், பெண்கள் பெட்டியில் கண்காணிப்பு கேமரா பொருத்தவும், ஜன்னல்கள் வழியாக சமூக விரோதிகள் நுழைவதை தடுக்க ஜன்னல்களில் கம்பி வலை பொருத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், பெண்கள் பெட்டிக்கு வரும் டிக்கெட் பரிசோதகர்கள், ரெயில்வே பாதுகாப்பு படையினர் ஆகியோரில் பெண்களும் இடம்பெறுவார்கள்.
ரெயில்களிலும், ரெயில் நிலையங்களிலும் பெண்களுக்கென தனி கழிப்பறைகள், உடை மாற்றும் அறைகள் கட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பெண்கள் பாதுகாப்பை கருத்தில்கொண்டு, இந்த அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இதுதொடர்பாக அனைத்து ரெயில்வே கோட்டங்களிடமும் கருத்து கேட்கப்பட்டுள்ளது. இந்த புதிய பெட்டிகள் விரைவில் ரெயில்களில் இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.