சென்னை :
நீட் தேர்வை எழுத வெளி மாநில தேர்வு மையங்களுக்கு செல்லும் மாணவ மாணவிகளுக்கு இரண்டாம் வகுப்பு ரயில் டிக்கெட்,1000 ரூபாய் நிதியுதவி தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள், 14417 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு கூடுதல் தகவல் உதவி பெறலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
நாளை மறுதினம் நடைபெற்ற நீட் தேர்வில், தமிழக மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், மாணவர்கள் தேர்வு எழுத தேவையான வசதிகளை செய்து தர அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் முன் வந்துள்ளன.
தமிழக அரசு உதவ வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்பட பல அரசியல் கட்சிகளும் வலியுறுத்தின.
இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற முதலமைச்சர் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில், நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு உதவ முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. அதைத் தொடர்ந்து தமிழக அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதில், தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் படித்து வெளி மாநிலத்திற்கு நீட் தேர்வு எழுத செல்லும் மாணவ, மாணவி யர்களுக்கும் மற்றும் அவர்களுடன் செல்லும் நபர் ஒருவருக்கும் பயணப்படியாக இரண்டாம் வகுப்பு ரயில் கட்டணம், இதர செலவுகளுக்காக மாணவர், தலா ஒருவருக்கு 1,000 ரூபாய் விதம் வழங்கப்படும். பஸ் மூலம் செல்பவர்களுக்கு இரண்டாம் வகுப்பு ரயில் கட்டணத்திற்கு மிகாமலும் வழங்கப்படும்.
இதை அவர்கள் கல்வி பயிலும் பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் மூலமாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடமிருந்து முன்பணமாக பெற்று கொள்ளலாம் அல்லது தேர்வு எழுதி திரும்பிய பிறகும், பயணம் மேற்கொண்டதற்கான உரிய ரசீதுகளை கொடுத்து மேற்படி தொகையை பெற்று கொள்ளலாம்.
முன்பணம் பெற்றவர்கள் தேர்வு எழுதி திரும்பிய பின், உரிய ரசீதுகளை சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் தாக்கல் செய்ய வேண்டும்.
நீட் தேர்வு நுழைவுச்சீட்டு நகல் மற்றும் படிக்கும் பள்ளியின் அடையாள அட்டை நகல் ஆகியவற்றை அடிப்படை யாக கொண்டு இந்த உதவித்தொகை வழங்கப்படும். இதில் சிரமம் ஏற்பட்டால், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை தொடர்பு கொள்ளலாம். அல்லது கட்டணமில்லா தகவல் மைய தொலைபேசி எண்ணான 14417 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உதவி பெறலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.