விழுப்புரம்
நேற்று விழுப்புரத்தில் நடந்த மிஸ் கூவாகம் அழகிப்போட்டியில் சென்னையை சேர்ந்த பொறியியல் பட்டதாரி மொபீனா மிஸ் கூவாகம் 2018 ஆக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சென்னையை அடுத்த விழுப்புரம் அருகே உள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரா பௌர்ணமி திருவிழாவுக்கு திருநங்கைகள் நாடெங்கும் வருவது வழக்கம். இந்த திருவிழாவை ஒட்டி தென் இந்திய திருநங்கையர் கூட்டமைப்பும் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தமிழ்நாடு சமூக நலத்துறை ஆகியவை இணைந்து திருநங்கைகளுக்கான அழகிப்போட்டியை நடத்தியது.
நேற்று மாலை விழுப்புரம் நகராட்சி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் சென்னை, கோவை, ஈரோடு, தூத்துக்குடி, சேலம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து 44 திருநங்கைகள் கலந்துக் கொண்டனர். இவர்களில் 15 பேர் தேர்ந்தெடுகப்பட்டு அவர்களின் அறிவுத்திறனை சோதிக்க கேள்விகள் கேட்கப்பட்டன. சென்னையை சேர்ந்த மொபீனா (வயது 24) மிஸ் கூவாகம் 2018 ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சென்னையை சேர்ந்த பிரீத்தி (வயது 24) இரண்டாம் இடத்தையும் ஈரோட்டை சேர்ந்த சுபஸ்ரீ (வயது 26) மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். மிஸ் கூவாகம் 2018ஆக தேர்ந்தெடுக்கப்பட்ட மொபீனா பொறியியலில் சிவில் பிரிவில் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.