சென்னை
பெண்களிடையே பொழுதுபோக்காக எடைதூக்கும் பயிற்சி செய்வது பரவி வருகிறது.
ஆண்களைப் போலவே பெண்களும் சமீபகாலமாக ஜிம் முக்கு செல்வதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். பெரும்பாலான பெண்கள் முன்பு தங்கள் உடல் பருமனைக் குறைப்பதற்கான பயிற்சிகளுக்காகவே ஜிம் சென்றனர். ஆனால் தற்போது அந்த நிலை மாறி வருகிறது. ஆண்களுக்கு சமமாக பெண்களும் உடல் வலுவேற்றும் பயிற்சிகளையும் எடை தூக்கும் பயிற்சிகளையும் செய்ய ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில் கௌரி என்னும் ஒரு 43 வயதுப் பெண்மணியைப் பார்ப்போம். இரண்டு வயது வந்த மகள்களுக்கு தாயான இல்லத்தரசியான கௌரி கர்நாடக சங்கீதம் பயின்றவர். இவரை சாதாரணமாக பார்ப்பவர் இவரை ஒரு மதராஸ் மாமி எனவே நினைப்பார்கள். ஆனால் அவர் தொடர்ந்து எடைதூக்கும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அவர் தற்போது 90 கிலோ எடை வரை சாதாரணமாக தூக்கும் அளவுக்கு பயிற்சி பெற்றுள்ளார்.
இவரைப் போலவே ஜ்யோத்ஸ்னா ஜான் என்னும் பெண் கடந்த ஐந்து வருடங்களாக பயிற்சி பெறுவதுடன் பலருக்கு பயிற்சியும் அளித்து வருகிறார். உடலைக் கட்டுக்குள் கொண்டு வர பயிற்சிகளை துவக்கிய இவர் தற்போது மாநில அளவில் எடைதூக்கும் வீராங்கனைகளுக்கு சமமாக எடை தூக்கும் திறன் கொண்டுள்ளார்.
பொதுவாக நம் நாட்டில் குறிப்பிட்ட வயதுக்கு மேல் பெண்கள் எடைதூக்கும் பயிற்சிக்கு லாயக்கில்லாதவர்கள் என கூறப்படுகிறது. ஆனால் அதை பொய்யாக்குவது போல மீனாள் என்னும் 62 வயதுப் பெண் கடந்த ஒரு வருடமாக எடைதூக்கும் பயிற்சி பெற்று வருகிறார். இவர்,” பலரும் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் இது போன்ற பயிற்சிகளில் ஈடுபட முடியாது என சொல்கிறார்கள். நான் தேசிய எடைதூக்கும் போட்டி கோவையில் நடந்த போது பங்கேற்றேன். அப்போது அனைவரும் நான் 60ஐ தாண்டிய பெண் என்பதை நம்ப மறுத்தார்கள்”என தெரிவித்துள்ளார்.
சென்னை பெண்கள் என்றாலே காப்பி, மெரினா பீச், மார்கழித் திருவிழாக்கள் ஆகியவைகளில் ஆர்வம் உடையவர்கள் என ஒரு எண்ணம் பொதுவாக உண்டு. ஆனால் அதை இந்தப் பெண்கள் மாற்றி உள்ளனர் என்பதே உண்மை ஆகும்.