டில்லி:
2019ம் ஆண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலுக்காக சிறுமி பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்று நிர்பயா தந்தை கூறினார்.
காஷ்மீர் காதுவா சிறுமி, உத்தரபிரதேசத்தில் இளம்பெண், குஜராத்தில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்வோருக்கு தூக்கு தண்டனை விதிக்கும் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
இது குறித்து டில்லியில் கூட்டு பலாத்காரத்தால் கொல்லப்பட்ட நிர்பயாவின் தந்தை கூறுகையில், ‘‘ 12 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு எதிரான பாலியல் கொடுமைக்கு மட்டும் தூக்கு தண்டனை என்பது ஏற்புடையதல்ல. அனைத்து பாலியல் பலாத்காரமும் பாலியல் பலாத்காரம் தான்.
அதனால் இந்த குற்றத்தில் ஈடுபடும் அனைவருக்கும் தூக்கு தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்க வேண்டும். சிறுமி அல்லது இளம்பெண் என்று பாகுபாடு பார்க்க கூடாது. 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலை கணக்கிட்டு இச்சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது’’ என்றார்.
இதே கருத்தை நிர்பயாவின் தாயும் வலியுறுத்தினார்.