சென்னை:
ஆவின் பாலில் கலப்படம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து வைத்தியநாதன், அவரது மனைவி ஆகியோர் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.
கடந்த 2014ம் ஆண்டு ஆவின் பாலில் கலப்படம் செய்தது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. திருவண்ணாமலையில் இருந்து சென்னை க்கு டேங்கர் லாரியில் கொண்டு வரும் பாலில் கலப்படம் செய்வதாக 2014 ம் ஆண்டு வைத்தியநாதன் உட்பட 23 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த பிரச்சினை தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குழந்தைகளுக்கு வழங்கப்படும் பாலில் கலப்படம் செய்தது மன்னிக்க முடியாத குற்றம் என்றும், அதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.
இதுகுறித்து சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. அதையடுத்து, கலப்பட பாலை கொண்டு சென்றதாக லாரி நிறுவன உரிமையாளரும், அப்போதைய அதிமுக மாவட்ட செயலாளருமான வைத்தியநாதன் உள்ளிட்ட 23 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் விழுப்புரம் மாவட்ட தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி வைத்தியநாதன் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு இன்று மீண்டும் சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆவின் பால் கலப்பட வழக்கிலிருந்து ஆவின் வைத்தியநாதன் மற்றும் அவரது மனைவி ரேவதி ஆகியோரை விடுவித்து உத்தரவிட்ட நீதிபதிகள், போதிய ஆதாரங்கள் இல்லாமல் தொடரப்பட்ட இந்த வழக்கை தொடர்ந்து விசாரிப்பது நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் செயல் என கருத்து தெரிவித்துள்ளனர்.