“ஸ்டெர்லைட் போராட்டத்தில் அரசியல்வாதிகளை நம்ப முடியாது” என்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்துவரும் பாத்திமாபாபு தெரிவித்துள்ளார்.
கடந்த 23ம் தேதி ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை எதிர்த்து மக்கள் தன்னெழுச்சியாய் தூத்துக்குடியில் பேரணி நடத்தியதும், பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் நடத்தப்பட்டதும் இந்தியா முழுவதையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.
எந்தவொரு அரசியல் கட்சியின் ஆதரவும் இன்றி பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியது, கட்சிகளை மிரளவைத்துள்ளது.
“மிக முக்கியமான இந்தப் பிரச்சினையில் அரசியல்வாதிகளை, போராட்டக்காரர்கள் புறக்கணித்தது ஏன்” என்ற கேள்வியை பாத்திமாபாபுவிடம் வைத்தோம்.
இவர் பல வருடங்களாக வீராங்கணி என்ற பெயரில் மக்களுக்காக அமைப்பு நடத்தி வருபவர். கல்லூரி பேராசிரியையாக பணியாற்றிய இவர், கடந்த 23 வருடங்களாக தொடர்ந்து மக்கள் நலப்போராட்டங்களில் பங்கெடுத்து வருகிறார். ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்திலும் ஆரம்பத்திலிருந்தே இருந்து வருகிறார். ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளி என்றே மக்கள் இவரை அழைக்கிறார்கள். 2011ம் ஆண்டு ம.தி.மு.க.வில் இணைந்து உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். அக்கட்சியின் அரசியல் ஆய்வுக்குழுவில் உறுப்பினராக இருக்கிறார்.
கடந்த 23ம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் வணிகர்சங்கம் ஏற்பாடுசெய்த போராட்டத்துக்கும் தனது முழு ஆதரவு அளித்ததோடு, அப்போராட்டத்தை ஒருங்கிணைப்பதில் முக்கிய பங்கு வகித்தார் பாத்திமாபாபு.
அவரிடம் அரசியல்வாதிகளை ஒதுக்கியது ஏன் என்று கேட்டோம்.
அவர், “தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் என்பது மிகமுக்கியமான மக்கள் பிரச்சினை. இந்த ஆலையால் நிலம், நீர், காற்று பாதிக்கப்படுவதோடு, மக்களும் பல வியாதிகள் ஏற்படுகின்றன” என்றவர், “இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை மக்களுக்கு அரசியல்வாதிகள் மீது நம்பிக்கையில்லை. இவன் காசுக்காக வர்றான். பெட்டிக்காக வர்றான் என்று மக்கள் சொல்கிறார்கள். ஆகவே அரசியல்வாதிகள் இன்றி இந்தப் போராட்டம் மக்கள் திரள் போராட்டமாக நடந்தது” என்றார்.
“போராட்டத்துக்கு மக்களை எப்படி ஒருங்கிணைத்தீர்கள்” என்று கேட்டதற்கு, “ஆட்டோ, கார், வேன் ஓட்டுநர்கள், உப்பு உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் என்று ஒவ்வொரு தரப்பினரையும் நேரில் சந்தித்து பேசினோம். அன்று பொதுக்கூட்டம் நடத்துவது என்பதோடு, முழு கடை அடைப்பும் நடக்க வேண்டும் என்றோம். அனைவரும் மனப்பூர்வமாக ஒப்புக்கொண்டனர்.
மாலை நடந்த பொதுக்கூட்டத்துக்கு வாட்ஸ்அப், முகநூல் என்று சமூகவலைதளங்கள் மூலம் ஆதரவு திரட்டினோம்.
இப்படி அனைவரும் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்தோம். மக்களும் தன்னெழுச்சியாக கலந்துகொண்டார்கள்.
பொதுக்கூட்டத்துக்கு மட்டும்தான் காவல்துறை 18 நிபந்தனைகளுடன் அனுமதி கொடுத்தது. பேரணிக்கு அனுமதி தரவில்லை.
ஆனால், மக்கள் சாரிசாரியாக கூட்டத்திடல் நோக்கி வந்ததே பல பேரணிகளை நடத்தியது போல ஆகிவிட்டது” என்றார்.
“ஊடகங்களில் இந்தச் செய்தி உரிய முக்கியத்துவம் பெறவில்லை என்ற விமர்சனம் இருக்கிறதே” என்றோம்.
அதற்கு பாத்திமாபாபு, “உண்மைதான். லட்சத்தைத் தாண்டிய மக்கள் கூட்டம். ஆனால் அதற்குரிய முக்கியத்துவத்துடன் ஊடகங்களில் செய்தி வெளியாக வில்லை. இங்கே இருக்கும் செய்தியாளர்கள் சரியாகத்தான் செய்தி அனுப்புகறார்கள்.
ஆனால் ஊடக முதலாளிகள், கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். ஆகவே போராட்ட செய்தியை வெளியிட மறுக்கிறார்கள்.. அல்லது உரிய முக்கியத்துவம் அளிப்பதில்லை. நாங்கள் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை.
எங்கள் போராட்டம் வெற்றி பெற்றே தீரும்” என்று உறுதியான குரலில் சொல்லி முடித்தார் பாத்திமாபாபு.