தஞ்சாவூர்:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, டி.டி.வி. தினகரன், நேற்று தஞ்சையில் உண்ணாவிரதம் இருந்தார். அப்போது தினமலர் (சென்னை) நாளிதழின் செய்தியாளர், டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டார். இது குறத்து நேற்று பத்திரிகை டாட் காம் இதழில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
(அந்த செய்தி: https://patrikai.com/ttv-dinakaran-supporters-attacked-dinamalar-journalist/ )
இந்த நிலையில் இன்று இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியாகி உள்ளது.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
“காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, மத்திய அரசை வலியுறுத்தி, தினகரனின், அ.ம.மு.க., சார்பில், தஞ்சையில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. ஏராள மானோர் இந்த போராட்டத்துக்கு வரவழைக்கப் பட்டிருந்தனர். காலை, 10 மணியளவில் துவங்கிய உண்ணாவிரதப் போராட்டத்தில், பேச்சாளர்கள், தினகரன் மற்றும் சசிகலாவின் புகழ்பாடுவதிலும், முதல்வர் பழனிசாமி, துணைமுதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோரை வசைபாடுவதிலுமே, தீவிரம் காட்டினர்.
நேரம் செல்ல செல்ல, கூட்டம் கலைந்து காலி யானது.நண்பகல், 12:?? மணிக்கு, அருகில் இருந்த டாஸ்மாக் மதுக்கடை திறந்ததும், உண்ணாவிரதத் தினர், அங்கு குவிந்தனர். உண்ணாவிரதம் நடந்த திலகர் திடல் அருகேயுள்ள, ‘அம்மா’ உணவகத் திலும், போராட்டத்துக்கு வந்திருந்தவர்களின் கூட்டம் அலைமோதியது.
மதியம், 1:45 மணிக்கு, அம்மாஉணவகத்தில் சாப்பிட்டு கொண்டிருந்த, தினகரன் கட்சியினரை, ‘தினமலர்’ நாளிதழின், தஞ்சாவூர் மாவட்ட நிருபர், சுந்தர் என்கிற சுந்தரராஜன் புகைப்படம் எடுத்தார். இதைப் பார்த்த தினகரன் கட்சியைச் சேர்ந்த,15க்கும்மேற்பட்டோர் அவரை சூழ்ந்து, தாக்கினர்; செய்தியாளரின் கழுத்திலிருந்த, 2 சவரன் தங்கச் சங்கிலியை பறித்த, அந்த கும்பல், கொலைமிரட்டல் விடுத்தது. தாக்குதலில் நிருபரின் கழுத்திலும், முகத்திலும் காயம் ஏற்பட்டது.
அவர் வைத்திருந்த, ‘கேமரா பேக்’ கிழிக்கப் பட்டது. அவரை,உண்ணாவிரத மேடை அருகே இழுத்துச் சென்று,தொடர்ந்து மிரட்டினர். அதை தடுக்க வந்த, புதிய தலைமுறை, ‘டிவி’ நிரு பரையும் சிலர் தாக்கினர். பின், சக நிருபர்கள் வந்து,அவர்களை அங்கிருந்து மீட்டனர். தாக்குதல் மற்றும் தங்கச் சங்கிலி பறிப்பு சம்பவம் தொடர்பாக, தஞ்சை கிழக்கு காவல் நிலையத்தில் செய்தியாளர் சுந்தரராஜன் புகார் அளித்துள்ளார்.
(கூடுதல் தகவல்களுக்கு நன்றி: தினமலர்)