லாகூர்:

கிறிஸ்தவ தம்பதியரை எரித்துக் கொன்ற வழக்கில் 20 பேரை பாகிஸ்தான் நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்தது.

பாகிஸ்தான் லாகூர் கசூர் மாவட்டம் சக் கிராமத்தை சேர்ந்தவர் சஹ்ஜாத் மசி (வயது 35) மற்றும் அவரது மனைவி ஷமா(வயது 31). இரவரும் செங்கல் சூளை தொழிலாளர்கள்.

தொழிலாளர்கள் தங்குவதற்கான கொட்டகையில் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த இந்த தம்பதியர் தங்களது 4 குழந்தைகளுடன் வசித்து வந்தனர். சூளை உரிமையாளர் முஹம்மத் யூசுப் குஜ்ஜார் தம்பதியருக்கு கூலி சரியாக வழங்கவில்லை. இதனால் தம்பதியருக்கும் முஹம்மத் யூசுப் குஜ்ஜாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. வேலையை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்றால் ரூ.5 லட்சம் வழங்கிவிட்டுதான் செல்ல வேண்டும் என்று சூளையின் உரிமையாளர் மிரட்டியுள்ளார்.

இந்த தம்பதியர் குரானை எரித்ததாக 4.-11.-2014ம் தேதி தகவல் பரவியது. இதை தொடர்ந்து இஸ்லாமியர்கள் திரண்டு தம்பதியரின் குடிசையை தீயிட்டு எரித்தனர். இதில் சிக்கிய கணவர், மனைவி இருவரும் பரிதாபமாக இறந்தனர். 4 குழந்தைகளும் உயிர் தப்பினர்.

இது தொடர்பாக சுமார் 50 பேர் கைது செய்யப்பட்டனர். 5 பேருக்கு கடந்த 2016-ம் ஆண்டில் மரண தண்டனையும், மேலும் 10 பேருக்கு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. மீதமுள்ள 20 பேருக்கு எதிரான வழக்கு விசாரணை லாகூர் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 20 பேரையும் விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.